Talks‎ > ‎

Arunachalam awarded Pravasi Bharathiya Samman Award

அருணாச்சலத்திற்கு பிரவசி பாரதிய சம்மான் விருது 

ஹாங்காங் வணிகரும் தொழிலதிபருமான திரு. எம். அருணாச்சலத்திற்கு இந்திய அரசு, சிறந்த வெளிநாட்டு இந்தியர்களுக்கு வழங்கப்படும்  'பிரவசி பாராதிய சம்மான்' விருதினை ஜனவரி 2005இல் வழங்கியது. ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் 19 மார்ச் 2005 அன்று அவருக்குப் பாராட்டு விழா நிகழ்த்தியது. அது போது மு இராமனாதன் வழங்கிய பாராட்டுரை

அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன்!

'பிரவசி பாரதிய சம்மான்' என்கிற இந்த விருது திரு.அருணாச்சலம் அவர்களுக்கு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி, மும்பையிலே நடந்த வெளிநாட்டு இந்தியர்கள் மாநாட்டில் நமது ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களால் வழங்கப்பட்டது. ஜனவரி மாதம் 9ஆம் தேதி மும்பை நகருக்கு மிகவும் முக்கியமானது. இந்திய வரலாற்றிலேயும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. 90 ஆண்டுகளுக்கு முன்னால்- 1914இல்- இதே ஜனவரி மாதம் 9ஆம் தேதிதான் தென்ஆப்பிரிக்காவில் இருந்து காந்தியடிகள் இந்தியாவிற்குத் திரும்பி வந்தார். மும்பைத் துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த ஒரு கப்பலின் சரிவான படிக்கட்டுகளில் இறங்கி வந்த அந்தக் கெச்சலான மனிதரை வரவேற்பதற்காக மக்கள் திரளாகக் குழுமியிருந்தார்கள். தென்னாப்பிரிக்காவில் நிற வெறிக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்களைக் குறித்த செய்திகள் சமுத்திரங்களைத் கடந்து இந்தியர்களை எட்டியிருந்தது. அதுவே மும்பையின் அப்பல்லோ பந்தரில் அவர்களைக் குழுமச் செய்திருந்தது.

அதற்குச் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால், வரலாற்று நூல்களில் இடம் பிடித்திருக்கிற 1893ஆம் ஆண்டு ஜீன் 7ஆம் தேதியன்று, தென்னாப்பிரிக்காவின் ஒரு முதல் வகுப்பு ரயில் பெட்டியில் காந்தியடிகள் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு கறுப்பனுக்கு முதல் வகுப்பில் பயணம் செய்ய யோக்கியதை இல்லை என்று சொல்லி, ஒரு வெள்ளை அதிகாரி் அவரைப் பிடித்துத் தள்ளி விட்டது அந்த இரவிலேதான். ஆளில்லாத ரயில்வே ஸ்டேஷனில், பனி பெய்து கொண்டிருந்த அந்த இரவில், தனது உடையில் படிந்திருந்த தூசியைத் தட்டி விட்டுக் கொண்டு எழுந்த அந்த மனிதர்தான், நாளதுவரை இந்தியாவின் மிகச் சிறந்த வெளிநாட்டு இந்தியன் என்று கொண்டாடப்படுகிறார். அதற்குப் பின்னால், தென்னாப்ரிக்காவில் அவர் நிறவெறிக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் பிரசித்தி பெற்றவை.

நெல்சன் மண்டேலா ஒரு முறை சொன்னார்: "1893இல் இந்தியா எங்கள் தேசத்துக்கு ஒரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை அனுப்பி வைத்தது. இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு 1913இல் இந்தியாவிற்கு நாங்கள் திருப்பி அனுப்பி வைத்தது மகாத்மா காந்தியை." இப்படிச் சொன்னார் மண்டேலா. இதற்கு அப்துல் கலாம் சொல்கிறார்- "இது தான் இந்தியாவின் சிறப்பு". அதாவது, செல்லுகிற இடத்துக்கு வளங்கள் சேர்ப்பது. இப்படி வளப்படுத்துவது என்பது நமது பராம்பரியத்தின் மூலமாக, அறிவின் மூலமாக, பண்பின் மூலமாக, கலாச்சாரத்தின் மூலமாக, சிந்துகிற வியர்வையின் மூலமாக, உழைப்பின் மூலமாக, ஈட்டுகிற பொருளின் மூலமாக, இந்தியர்கள் எங்கு போனாலும் தாங்கள் செல்லுகிற இடத்தைச் சிறப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட வெளிநாட்டு இந்தியர்கள், ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா என்று பூமிப்பந்து முழுவதும் படர்ந்திருக்கிறார்கள். 102 தேசங்களில் 2 1/2 கோடி இந்தியர்கள் பரவியிருப்பதாகச் சொல்லுகிறது அரசின் புள்ளிவிபரம். இவர்களைப் பாராட்டுகிற விதமாக, இவர்களுடைய சேவையை அங்கீகரிக்கிற விதமாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, இந்திய அரசாங்கம் வெளிநாட்டு இந்தியர்களுக்கான ஒரு மாநாட்டை நடத்தத் துவங்கியது. இந்த மாநாட்டின் கடைசி நாளன்று, இந்த வெளிநாட்டு இந்தியர்களில், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்ககளில் ஆகச் சிறந்து விளங்கும் 12 பேரைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கும் வழக்கத்தையும் தொடங்கியது. இந்த மாநாட்டிற்கு பிரவசி பாரதிய திவஸ் என்றும், இந்த விருதுகளுக்கு பிரவசி பாரதிய சம்மான் என்றும் பெயரிட்டது.

2003ஆவது ஆண்டு, அதாவது இந்த மாநாடு நடக்கத் தொடங்கிய ஆண்டு, விருது வாங்கியவர்கள் பட்டியலைப் பார்த்தால், அதில் மலேசியாவின் பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமுவேலின் பெயர் இருக்கிறது. பொது நல நாடுகளின் முன்னாள் பொதுச் செயலாளர் ராம் பாலின் பெயர் இருக்கிறது. ஹாங்காங் பிரமுகர், பல்வேறு வணிகக் குழுமங்களின் தலைவர் ஹரி லீலாவின் பெயர் இருக்கிறது. 2004இன் பட்டியலில் விண்வெளி வீராங்கனை, அல்பாயசிலே மரித்துப் போன கல்பனா சாவ்லாவின் பெயர் இருக்கிறது. எழுத்தாளரும் பத்திரிக்கையாளரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நீண்ட நாள் அலுவலருமான டாக்டர் சசி தாரூரின் பெயர் இருக்கிறது. கெல்லாக் மேலாண்மைப் பள்ளியின் தலைவர், பேராசிரியர் தீபக் ஜெயினின் பெயர் இருக்கிறது.

ஆனால் எனக்கென்னவோ, இந்த 2003, 2004 ஆண்டுகளின் விருதுப் பட்டியல்களைப் பார்க்கிலும், 2005இன் விருதுப் பட்டியல்தான் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அதிலேதான் ஆங்கில இலக்கியத்தில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிற A Suitable Boyஇன் ஆசிரியர் விக்ரம் சேத்தின் பெயர் இருக்கிறது. தன்னுடைய Sixth Sense படத்தின் மூலம் ஹாலிவுட்டில் சாதனைகள் நிகழ்த்தியிருக்கும் இயக்குனர் மனோஜ் நைட் சியாமளனின் பெயர் இருக்கிறது. தொலைத் தொடர்புத் துறையிலே பல புரட்சிகளைச் செய்த சாம் பிட்ரோடாவின் பெயர் இருக்கிறது. கோல்ஃப் வீரர் விஜய் சிங்கின் பெயர் இருக்கிறது. அந்தப் பட்டியலிலேதான், அன்பு நெஞ்சங்களே! ஹாங்காங் தமிழர் அருணாச்சலத்தின் பெயர் இருக்கிறது.

25 ஆண்டுகளுக்கு முன்னால், இந்த ஹாங்காங் மண்ணிலே ஒரு வங்கி அலுவலராகக் காலடி எடுத்து வைத்தார் அருணாச்சலம். அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னால் அவர் வர்த்தகத் துறையிலே புகுந்தார். பிறகு ஆங்கிலத்திலே சொல்லுவது போல அவர் திரும்பிப் பார்க்கவேயில்லை. அவரது வணிகம் பல்கிப் பெருகியது. இப்போது அவர் ஒரு தொழிலதிபராகவும் உயர்ந்திருக்கிறார். இன்றைக்கு அவர் தொடாத துறைகள் இல்லை. தளவாடங்களில் இருந்து தானியங்கள் வரை, மென்பொருள்களில் இருந்து தோல் பொருட்கள் வரை, காகிதங்களிலிருந்து ஆடை அணிகலன்கள் வரை, பலவற்றிலேயும் அவர் தடம் பதித்திருக்கிறார்.APJ Abdul Kalam, president of India, presenting the Pravasi  Bharthiya Samman award to M Arunachalam. Jagadish Tytler, union minister for overseas Indian affairs looks on. (Mumbai, 9 January 2005)
J V Ramani, president of the Hong Kong Tamil Cultural Association presenting a memento to M Arunachalam (Hong Kong, 19 March 2005)
(L-R) J V Ramani, M Arunachalam, Mu Ramanathan


Mu Ramanathan felicitates


M Arunachalam thanks Hong Kong Tamils
Comments