ஹாங்காங்கில் "எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா

காழி அலாவுதீன்செ முஹம்மது யூனூஸ் அவர்களின் "எனது பர்மா குறிப்புகள்" நூலின் ஹாங்காங் வெளியீட்டு விழா சனிக்கிழமை, 20 பிப்ரவரி 2010 அன்று நடைபெற்றது. ஹாங்காங் இந்திய முஸ்லிம் சங்கம், தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், ஹாங்காங்கில் தமிழ் வகுப்புகள் நடத்தி வரும் இளம் இந்திய நண்பர்கள் குழு மற்றும் இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த விழா, யூனூஸ் அவர்களின் பாராட்டு விழாவாகவும் அமைந்தது.


ஹாங்காங்கின் பிப்ரவரிக் குளிரைப் பொருட்படுத்தாமல் வந்திருந்த 350க்கும் மேற்பட்ட அன்பர்களால் அரங்கு நிரம்பியிருந்தது. யூனூஸ் பாய் தன் அன்பாலும் பண்பாலும் அவர்கள் மனதில் இடம் பெற்றிருப்பதை உணர முடிந்தது. அன்பர்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தொடர்ந்து ப குருநாதன் மற்றும் நளினி ராஜேந்திரன் ஆகியோர் நூலின் சிறப்புகளைக் குறித்துப் பேசினார்கள்.


மு இராமனாதன் இப்படியான நூலுக்குத் தமிழில் முன்மாதிரி உள்ளதா என்று தனக்குத் தெரியவில்லை என்றார். இதில் ஒரு காலகட்டத்தின் வரலாறு, சமூகம், கலை, இலக்கியம், சமயம் என்று பலவும், சமூக அக்கறை மிகுந்த ஒரு தனிமனிதரின் பார்வை வழியாக விரிகிறது என்றார். நூலின் உள்ளடக்கத்தைப் போலவே இது உருவாக்கப்பட்ட முறையும் புதுமையானது என்றார். யூனூஸ் பாயின் நேர்காணல்களை இலக்கக் கோப்புகளாகப் பதிவு செய்து, தான் அவற்றை நண்பர்களுக்குப் பகிர்ந்தளித்ததையும், நண்பர்கள் அவற்றைக் கேட்டு, கூகிள் ஆவணங்களில் தட்டச்சு செய்ததையும், பிறப்பாடு இவை இயல் வாரியாகத் தொகுக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டதையும் விளக்கினார்.


நூலை வெளியிட்ட ஹாங்காங் இந்தியத் தூதர் மாண்புமிகு எல்.டி. ரால்டே, இந்த அரிய நூலை ஆங்கிலத்தில் பெயர்க்க வேண்டுமென்றார். யூனூஸ் பாய் ஹாங்காங்கைப் பற்றிய தமது அனுபவங்களையும் நூலாக எழுதி வெளியிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.


Comments