Burma Memoirs‎ > ‎

காரைக்குடியில் "எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா

ரெ.சந்திரமோகன்



பிப்ரவரி 13, 2010 சனிக்கிழமையன்று காரைக்குடிப் புத்தகத் திருவிழாவில் செ.முஹம்மது யூனூஸ் அவர்களின் "எனது பர்மா குறிப்புகள்” நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான சக்தி அ.திருநாவுக்கரசு தலைமை வகித்து நூலினை வெளியிட்டார். பேராசிரியர் டாக்டர் அய்க்கண் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். இராமசாமி தமிழ்க் கல்லூரி முதல்வர் முனைவர் நா.வள்ளி திறானாய்வுரை நிகழ்த்தினார். நூலின் தொகுப்பாசிரியர் மு இராமனாதன் ஏற்புரை வழங்கினார்.

ஆசிரியர்கள் தாம் நூலை நேராக எழுதுவார்கள். ஆனால் இந்த நூலில் முஹம்மது யூனூஸ் பேசப் பேச அதைக் கேட்டு, எழுதி, தொகுத்து வெளியிட்டிருக்கிறார் இராமனாதன்; இதற்காக இரண்டாண்டு காலம் உழைத்திருக்கிறார், இந்த முயற்சி பாரட்டப்பட வேண்டியது என்று பேசினார் சக்தி அ.திருநாவுக்கரசு. இது நூல் தயாரிப்பில் ஒரு புதிய முறை. இதே முறையில் வள்ளல் அழகப்பச் செட்டியாரின் வரலாற்றை அவரது சமகாலத்தில் வாழ்ந்தவர்களிடம் கேட்டறிந்து ஆவணப்படுத்த வேண்டும் என்கிற விருப்பத்தையும் தெரிவித்தார்.

டாக்டர் அய்க்கண் தனது சிறப்புரையில், இந்த நூலின் நாயகன் முஹம்மது யூனூஸ் ஒரு சாமானியன்தான். ஆனால் இந்த நூலில் அவர் உண்மையைச் சொல்கிறார், ஒளிவு மறைவின்றி நேர்மையோடு சொல்கிறார், எளிமையாகச் சொல்கிறார், நினைவாற்றலோடு சொல்கிறார், இவையே இந்த நூலை வெகு சிறப்பான ஒன்றாக ஆக்கியிருக்கிறது என்றார். நூலின் ஒவ்வொரு வரியிலும் உயிரோட்டம் இருக்கிறது, பல்வேறு அரிய பதிவுகளும், அனுபவத்தில் தோய்ந்த யதார்த்தமான விமர்சனங்களும், அவை அக்கால சாமானியனின் உணர்வுகளாகவும், எந்தவிதச் சார்பும் இல்லாமல் அமைந்திருப்பதையும் பாராட்டினார். ஒரு தமிழ் நூல் மிகச் சிறந்த கட்டமைப்போடு வெளியாகியிருக்கிறது என்று கூறி நூலை வெளியிட்டிருக்கும் காலச்சுவடு பதிப்பகத்தையும் பாராட்டினார்.



Comments