அஞ்சலி: செ. முஹம்மது யூனூஸ் (1924 - 2015)

ஒரு மானுட நேயர்   

மு. இராமனாதன்

எனது பர்மா குறிப்புகள்’ புத்தகத்தில் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்கிற இடத்தில் யூனூஸ் பாய் இப்படித் தொடங்குவார்: “1924ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று பிறந்தேன்.” டிசம்பர் 25 என்று தேதியைக் குறிப்பிடமாட்டார். ஒருவேளை தனது மரணச் செய்தியைத் தானே எழுதுகிற வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருந்தால், “2015ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி உயிர்நீத்தேன்” என்று எழுதியிருக்க மாட்டார். மாறாக, “2015ஆம் ஆண்டு திருநாளான பக்ரீத் அன்று உயிர்நீத்தேன்” என்றுதான் எழுதியிருப்பார்.

தன்னைச் சமூகவியக்கத்தின் அங்கமாகத்தான் யூனூஸ் பாய் எப்போதும் கருதி வந்தார். தான் வாழ்கிற சமூகத்தைக் குறித்த அக்கறையும், சகமனிதர்கள்மீது எல்லையற்ற நேசமும் அவருக்கு இருந்தது. அதனால்தான் ‘எனது பர்மா குறிப்புகள்’ புத்தகத்தில் அவர் தன்னைப் பற்றிச் சொன்னவை குறைவு. நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய சுதந்திர லீக்கில் அங்கம் வகித்திருக்கிறார்; ரங்கூனுக்கு அருகேயுள்ள சவுட்டான் என்கிற அவரது ஊரின் கிளைச் செயலாளராக இருந்திருக்கிறார்; அதன் உளவுத்துறையில் பணியாற்றியிருக்கிறார். புத்தகத்தில் இந்தப் பகுதியை வேகமாகக் கடந்து போய்விடுவார். ரங்கூன் நகராட்சியின் உறுப்பினராக இருந்திருக்கிறார். இதைப்பற்றிப் புத்தகத்தில் அவர் சொல்லுவதே இல்லை. இப்படித் தனது பொதுவாழ்வு ஈடுபாட்டைப் பற்றிக்கூட மிகக்குறைவாகச் சொல்லும் யூனூஸ் பாய், இரண்டாம் உலகப்போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, நேத்தாஜி, காந்தியடிகள், இந்திய பர்மீய விடுதலைப்போர், பர்மாவின் ராணுவ ஆட்சி, இந்தியர்கள் பர்மாவில் செல்வாக்கோடு வாழ்ந்த காலங்கள், பிற்பாடு அவர்களுக்கு நேரிட்ட வாழ்வுரிமைச் சிக்கல்கள் முதலானவற்றைக் குறித்து புத்தகத்தில் விரிவாகப் பேசுவார். நாம் சொல்லுவது மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பார்.

யூனூஸ் பாய் பர்மாவில் பிறந்தவர். இராமநாதபுர மாவட்டம் இளையாங்குடி அவரது பூர்வீகம். அவரது பாட்டனார் காலத்தில் பர்மாவுக்குப் புலம்பெயர்ந்த குடும்பம். யூனூஸ் பாயைச் சேர்த்து உடன்பிறந்தவர்கள் ஏழுபேர். அவரது சிறிய தாயாருக்குப் பிறந்தவர்கள் ஏழுபேர். இந்தப் பதினாலு குடும்பங்களோடும் அவருக்கு இணக்கமான உறவு இருந்துவந்தது. குடும்பம் என்றில்லை, அவரது நட்பு வட்டமும் அவரது அபிமானிகள் வட்டமும் அவரது மனதைப்போலவே விசாலமானது.

இரண்டாம் உலகப் போரின்போது பர்மாவில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இவரது பள்ளிக்கல்வி தடைப்பட்டது. ஆனால் தனது சொந்த முயற்சியில் தமிழ், ஆங்கிலம், பர்மீயம் ஆகிய மொழிகளைக் கற்றார். கம்பனில் அவருக்குப் புலமை உண்டு. மகாபாரதம் மனித வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி இருக்கிறது என்பார். கர்னாடக சங்கீதத்தில் ஈடுபாடு மிக்கவர். நன்றாகப் பாடக் கூடியவர். ரங்கூனில் பயண முகவாண்மையகம் நடத்திவந்தார். அகில பர்மா தமிழர் சங்கம் எனும் அமைப்பில் முன்கை எடுத்துச் செயல்பட்டவர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்து ராமலிங்கத்தேவர் முதலான தலைவர்களோடு அவருக்கு அறிமுகம் இருந்தது. 1962இல் பர்மாவில் ராணுவ ஆட்சி ஏற்பட்டது. எல்லாவற்றையும் தேசியமயம் ஆக்கினார்கள். கரன்ஸி செல்லாமல் போனது. மக்கள் அடிப்படைத் தேவைகளுக்குச் சிரமப்பட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் தொழிலும் வருமானமும் இல்லாமல் யூனூஸ் பாய் நான்காண்டுகள் ரங்கூனில் வாழ்ந்தார். அவர் பர்மாவைத் திருநாடு என்றுதான் சொல்லுவார். சவுட்டானைத்தான் தன்னுடைய ஊர் என்று சொல்லுவார். அப்படியான ஊரைவிட்டு 1966இல் வெளியேறினார். “நான் பிறந்து, வளர்ந்து, படித்து, ஆடிப்பாடி, மணமுடித்து, தொழில் செய்து, பிள்ளைகளைப் பெற்று வளர்த்த பர்மாவில் இருந்து வெளியேறும்படியானது” என்று குரல் கம்ம நினைவு கூர்ந்திருக்கிறார்.

ஹாங்காங்கிற்கு வந்தபோது அவரிடத்தில் சொற்பமான முதல்தான் இருந்தது. நண்பர்களின் உதவியோடு வாசனைத் திரவியங்கள் ஏற்றுமதி செய்தார். மாணிக்க வியாபாரமும் செய்தார். அத்தோடு நின்றிருந்தால் இன்னொரு வணிகராக அவரது வாழ்க்கை முடிந்திருக்கும். தனது சமூகப் பங்கேற்பால் ஹாங்காங் இந்தியர்களின் நேசத்திற்கு உரியவரானார். இந்தியர்கள் கலந்துகொள்ளும் எல்லா முக்கியமான நிகழ்வுகளிலும் அவரது பங்களிப்பு இருந்து வந்தது.

ஹாங்காங் இந்திய முஸ்லிம் சங்கம், தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் ஆகிய அமைப்புகளை நிறுவியவர்களுள் யூனூஸ் பாய் முக்கியமானவர். ஹாங்காங்கில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் அடக்கஸ்தலங்களின் நிர்வாகத்தைக் கவனித்துவரும் The Incorporated Trustees of Islamic Community of Hong Kong இல் இந்திய முஸ்லிம்களின் சார்பாக தக்காராக இருந்திருக்கிறார். இந்திய முஸ்லிம் சங்கத்தின் தலைவராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

ஹாங்காங்கின் கவ்லூன் பகுதியில் நடுநாயகமாக அமைந்திருக்கும் பள்ளிவாசலை நகரின் அணிகலன் என்று வர்ணிக்கிறது சுற்றுலாத் துறைக் கையேடு. இந்த அழகிய பள்ளிவாசலை நிர்மாணித்ததில் யூனூஸ் பாய்க்குக் கணிசமான பங்கு உண்டு. பிரிட்டிஷ் ராணுவத்தின் ஹாங்காங் ரெஜிமெண்டில் பணியாற்றிய இந்திய வீரர்களுக்காக இப்போது பள்ளிவாசல் இருக்கும் இடத்தை 1892இல் வழங்கியது ஆங்கிலயே அரசு. வீரர்கள் நிதி திரட்டி 1896இல் இந்த இடத்தில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். பள்ளிவாசல் காலப்போக்கில் சிதிலமடையத் தொடங்கியது. 1978இல் பள்ளிவாசலுக்கு அருகிலேயே மெட்ரோ சுரங்க ரயில் நிலையம் கட்டப்பட்டபோது கட்டடம் மேலும் பாதிப்புக்குள்ளானது. புதிய பள்ளி கட்டுவதென்று முடிவானது. 1980இல் பணி தொடங்கியது. 16,000 சதுர அடிப் பரப்பில் கலைநயத்தோடு கட்டப்பட்ட புதிய பள்ளிவாசல் 1984இல் திறக்கப்பட்டது. கட்டுமானக் குழுவின் செயலாளராக இருந்தார் யூனூஸ் பாய். இப்போது 3000க்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பள்ளிவாசலில் தொழுவதற்கு வருகிறார்கள்.

2001இல் நண்பர்கள் சிலர் சேர்ந்து இலக்கிய வட்டம் என்கிற அமைப்பை ஆரம்பித்தோம். வட்டத்தின் கூட்டங்களை அரசின் கலாச்சாரத்துறைக்குச் சொந்தமான குறைவான வாடகையில் எல்லா வசதிகளும் பொருந்திய காணும் கலை மையத்தின் விரிவுரை அரங்கில் நடத்திவந்தோம். அரங்கிற்கு அருகில் மெட்ரோ ரயில் நிலையம் எதுவுமில்லை. பேருந்து வசதியும் குறைவு. யூனூஸ் பாயின் மகன் நாஸீர் அவரைத் தனது காரில் கூட்டங்களுக்கு அழைத்து வருவார். மையத்தில் கார் நிறுத்தும் வசதியும் குறைவு. முன்னதாகவே மின்னஞ்சலில் அனுமதி பெறவேண்டும். அவரது வயதில் வேறு யாரும் இத்தனை சிரமங்களுக்கிடையில் வந்திருப்பார்களா என்பது ஐயமே. பாய் எல்லாக் கூட்டங்களுக்கும் வருவார். நிறைவுரை ஆற்றுவார். பேச்சாளர்களை உற்சாகப்படுத்துவார். 2008இல் வட்டத்தின் 25ஆம் கூட்டம் நடந்தது. அப்போது அதுவரை நடந்த கூட்டங்களின் தொகுப்புரையாக ‘இலக்கிய வெள்ளி’ என்கிற நூலைத் தயாரித்தோம். பாய்தான் நூலை வெளியிட்டார். அந்த நூலை யாருக்குச் சமர்ப்பணம் செய்வது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. அவருக்குச் சமர்ப்பணம் செய்யப்படுகிற தகுதி நூலுக்கு இருக்க வேண்டுமே என்கிற கவலைதான் இருந்தது. இலக்கிய வட்டத்தை அவர் ஆதரித்து வந்ததற்கான நன்றிக் கடனை ஒருபோதும் திரும்பச் செலுத்த முடியாது என்பது எனக்குத் தெரியும். என்றாலும் பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைக்கிற மாதிரி இதைச் செய்தோம். ஆனால் அதுவே அவரை வெகுவாக நெகிழச் செய்துவிட்டது.

உரையாடல்களில் அவர் சுயதணிக்கை செய்து கொண்டுதான் பேசுவார். யார் மனதும் புண்படும்படியாக ஒரு வார்த்தையும் சொல்லிவிடக்கூடாது என்பதுதான் காரணம். அப்படியும் சில செய்திகளை என்னோடு பகிர்ந்துகொண்டார். சில நண்பர்களைப் பற்றி, சில குடும்ப உறுப்பினர்களைப் பற்றிக்கூடச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவற்றை நான் யாரோடும் பகிர்ந்துகொள்ள முடியாது. அதுதான் நிபந்தனை. ஒரு உதாரணம் சொல்கிறேன். பெயர் வேண்டாம். யூனூஸ் பாய் அவரது நண்பர் ஒருவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தார். ஒருமுறை நண்பர், அவரது அண்ணன் மனங் கோணும்படியான ஒரு காரியத்தைச் செய்துவிடுகிறார். அண்ணன் கோபத்தில் தம்பியிடத்தில் “நீ சோற்றைத் தின்கிறாயா; வேறு ஏதேனும் தின்கிறாயா” என்று கேட்டுவிடுகிறார். அதிர்ந்து பேசாதவர் அண்ணன். அவரை இப்படிக் கேட்கச் செய்துவிட்டோமே என்று தம்பிக்கு வருத்தம்; அவர் சாப்பிடுவதையே நிறுத்திவிடுகிறார். ஒரு நாள், இரண்டு நாள், மூன்றாம் நாளும் பட்டினி கிடக்கிறார். யூனூஸ் பாய் உட்பட அவரது நண்பர்களும் உறவினர்களும் தம்பியை உண்ணாவிரதத்திலிருந்து பின்வாங்குமாறு வற்புறுத்துகின்றனர். கடைசியாகத் தம்பியும் இணங்குகிறார். கூடவே ஒரு புதிய தீர்மானத்தையும் எடுக்கிறார். “எனது அண்ணன் மனம் வருந்தும்படியான ஒரு காரியத்தை நான் செய்துவிட்டேன். வாழ்நாள் முழுதும் அதை நான் மனதில் நிறுத்த வேண்டும். அதனால் இன்று முதல் சோறுண்ண மாட்டேன். காலையில் பலகாரமும் இரவில் பழங்களும் மட்டுமே சாப்பிடுவேன்” என்கிறார். அப்படியே இரண்டுவேளை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்தார்.

உரையாடலின் போக்கில் இந்தச் சம்பவத்தை விவரித்த யூனூஸ் பாய், கடைசியாக இதைப் புத்தகத்தில் சேர்க்க வேண்டாம் என்று சொன்னார். இப்படியான தனிநபர் சம்பவங்கள் என்றில்லை, பொதுவான விஷயங்களிலும் அவர் அப்படியான கருத்தில்தான் இருந்தார். ஒரு உரையாடலின்போது பர்மீயர்கள் தமிழர்களைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள், பர்மீயர்கள் பொறாமைப்படும்படியான நிலையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை விரிவாகச் சொல்லிக்கொண்டு வந்தார். தமிழர்களும் பர்மீயர்களை ஏமாற்றியிருப்பதாக நான் கேள்விப்பட்ட ஒன்றிரண்டு செய்திகளைச் சொல்லி, அதைப்பற்றி அவரிடம் கருத்துக் கேட்டேன். அப்படியான சம்பவம் ஒன்றை அவரும் சொன்னார். கூடவே ‘இப்படி எங்கேயாவது நடந்திருக்கலாம். பொதுமைப்படுத்த முடியாது’ என்றார். நான் சொன்னேன்: ‘சரி அப்படியான சம்பவங்களையும் நாம் புத்தகத்தில் சேர்த்துக் கொள்வோம். இந்தப் புத்தகம் ஒரு வாய்மொழி வரலாறு. இது பர்மீயத் தமிழர்களின் வாழ்வைக் குறித்து இதுகாறும் எழுதப்படாத ஒரு ஆவணம். இதில் நிறைகளைப் போலவே குறைகளும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஆவணம் முழுமை பெறும்.’ என்னுடைய வாதம் அவரிடம் எடுபடவில்லை. “சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம்” என்று பதில் சொல்லிவிட்டார்.

அவர் மென்மையானவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுகிற உள்ளம் அவருடையது. அனுதினமும் நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் படிப்பார். தொலைக்காட்சிச் செய்தி அறிக்கைகளைத் தொடர்ந்து பார்ப்பார். மனிதர்கள் ஏன் இப்படிக் குரோதத்துடன் நடந்துகொள்கிறார்கள் என்று ஆவலாதிப்படுவார். யுத்தத்தையும் மரணங்களையும் அருகாமையிலிருந்து பார்த்தவர். அகதி வாழ்க்கையும் அதன் அலைச்சலும் அவருக்குத் தெரியும். ஒருவன் நாடற்றுப் போவதன் துயரத்தை உணர்ந்தவர் அவர். இந்தமனிதர்கள் ஏன் வரலாற்றிலிருந்து பாடங் கற்றுக்கொள்வதில்லை என்று வருத்தப்படுவார்.

பர்மாவில் பிறந்து ஹாங்காங்கில் மறைந்தவர்; 42 ஆண்டுகள் பர்மாவிலும் 49 ஆண்டுகள் ஹாங்காங்கிலும் வாழ்ந்தவர்; இந்தியாவிற்கு ஒரு சுற்றுலாப் பயணியைப்போல் போய்வந்து கொண்டிருந்தவர்; எனில் அவர் ஒரு இந்தியராகவே வாழ்ந்தார். பர்மீயக் குடியுரிமையோ, பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங்கில் பிரிட்டிஷ் குடியுரிமையோ, சீனாவிற்குக் கைமாறிய பிறகு ஹாங்காங் குடியுரிமையோ அவர் பெற்றுக் கொள்ளவில்லை - ஒரு வணிகராகவும் சுற்றுலாப் பயணியாகவும் அதில் பயன்கள் இருந்தபோதும்! 1950இல் இந்தியா குடியரசானதும் கடவுச்சீட்டு வழங்கத் தொடங்கியது. அந்த ஆண்டே ரங்கூன் இந்தியத் தூதரகத்தில் விண்ணப்பித்து, இந்தியக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டார்.

சமீபத்தில் அடுத்தடுத்து முக்கியமான ஆளுமைகள் தமிழகத்தில் காலமானார்கள். இந்த இழப்புகள் அவரை வருந்தச் செய்தன. இலக்கிய வட்டத்தில் எல்லோருக்குமாகச் சேர்த்து ஓர் அஞ்சலிக் கூட்டம் நடத்துமாறு என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். நானும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தேன். ஆனால் அதற்கு முன்பாகக் காலம் அவருக்கான அஞ்சலிக் கூட்டத்தை ஏற்பாடு செய்துவிட்டது.

(மு இராமனாதன் ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர். செ.முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்” நூலின் தொகுப்பாசிரியர்.

மின்னஞ்சல்: mu.ramanathan@gmail.com)
Comments