இரண்டு புத்தகக் காட்சிகள்

மு. இராமனாதன்பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் புத்தக ஆர்வலர்களும் பரவசத்தோடு எதிர்நோக்கிய 38-வது சென்னைப் புத்தகக் காட்சி தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு இரண்டு லட்சம் சதுர அடிப்பரப்பில், 440 விற்பனையாளர்கள் புத்தகங்களை அடுக்கி வைத் திருந்தார்கள். 10 லட்சம் பேர் வருகை தந்தனர். ரூ.15 கோடி மதிப்பிலான 30 லட்சம் புத்தகங்கள் விற்பனையாயின. சராசரியாக ஒவ்வொரு பார்வையாளரும் ரூ.150-க்கு புத்தகங்கள் வாங்கியதாகக் கொள்ளலாம். மகிழ்ச்சிதான்.

அசோகமித்திரன் சுமார் 200 சிறுகதைகள், 400 கட்டுரைகள், 7 நாவல்கள், 10 குறுநாவல்கள், 4 மொழி பெயர்ப்பு நூல்கள் தந்திருக்கிறார். 1996-ல் அவரது ‘18வது அட்சக்கோடு’ நாவலும் ‘இருவருக்கும் போதும்’ என்ற சிறுகதைத் தொகுப்பும்தான் சந்தையில் கிடைத்ததாக சமீபத்தில் ஒரு பதிப்பாளர் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது அவரது படைப்புகள் பலவும் கிடைக்கின்றன. இதில் சென்னைப் புத்தகக் காட்சியின் பங்கு முக்கியமானது. இது முன்னேற்றம்தான் என்றாலும், நமது வளர்ச்சியை அளவிடுவதற்குச் சொந்த அளவுகோலைப் பயன்படுத்தாமல், சர்வதேச அளவுகோலைப் பயன்படுத்தினால் உலக அரங்கில் நாம் எங்கே நிற்கிறோம் என்பது துலக்கமாகும்.

அதற்காக ஹாங்காங்கை எடுத்துக்கொள்ளலாம். ஹாங்காங் பரப்பளவிலும் மக்கள்தொகையிலும் சென்னைப் பெருநகரத்தோடு ஒப்பிடத் தக்கதுதான். ஹாங்காங்கிலும் ஆண்டுதோறும் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. ஜூலை 2014-ல் நடந்தது 25-வது புத்தகக் காட்சி. சென்னையைப் போலவே 10 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்தார்கள். ஆனால், சென்னையைப் போல் இரண்டு வாரங்கள் அல்ல, ஹாங்காங் புத்தகக் காட்சி ஒரு வாரமே நடந்தது.

31 நாடுகளின் புத்தகங்கள்

நான் போனது சனிக்கிழமை பிற்பகல். ஒரு மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. சர்வதேச மாநாடுகளும் சந்தைகளும் கண்காட்சிகளும் நடைபெறும் கன்வென்ஷன் சென்டரின் நான்கு தளங்களில் புத்தகக் காட்சி நடந்தது. முதல் தளத்தில் சுமார் 4½ லட்சம் சதுரஅடிப் பரப்பில் விற்பனை அரங்குகள் இருந்தன. சீன மொழிக்கு அடுத்தபடியாக ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன. இதைத் தவிர, சர்வதேச அரங்கில் 31 நாடுகளின் புத்தகங்களும் அவற்றின் மொழிபெயர்ப்புகளும் கிடைத்தன. அரங்குகளில், அகன்ற நடைபாதைகளில் எங்கும் வாசகர்கள்; புத்தகம் என்பதே பேச்சு.

இரண்டாம் தளத்தில் கருத்தரங்க மண்டபங்கள். ஒவ்வொரு நாளும் 10 சீனப் புத்தகங்களும் இரண்டு ஆங்கிலப் புத்தகங்களும் வெளியிடப்பட்டன. எழுத் தாளர்கள் பங்கெடுத்த கருத்தரங்குகள், வாசிப்பரங்குகள், படைப்பிலக்கியப் பட்டறைகள் நடந்த வண்ணமிருந்தன. சிறுவர் இலக்கியத்துக்காகவே பிரத்யேக அரங்குகள்; அவற்றில் குழந்தை எழுத்தாளர்கள் கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பலவற்றிலும் கலந்துகொள்ள இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

நான் லாரன்ஸ் ஒஸ்போர்ன் எனும் ஆங்கில எழுத்தாளரின் கருத்தரங்குக்குப் போனேன். அவரது நாவலான ‘தி பலார்டு ஆஃப் எ ஸ்மால் பிளேயர்’அப்போதுதான் வெளியாகி யிருந்தது. ஒஸ்போர்ன், முதலில் நாவலைப் பற்றிப் பேசினார். பிறகு, நாவலின் சில பகுதிகளை வாசித்தார். வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஒன்றரை மணிநேரம் நீண்ட கூட்டத்தின் முடிவில் தனது புத்தகங்களை வாங்கியவர்களுக்குக் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

பதிப்பகத்தின் நூற்றாண்டு

மூன்றாம் தளத்தில் இன்னொரு 4½ லட்சம் சதுரஅடிப் பரப்பில் மின்புத்தகங்கள், ஒலிப்புத்தகங்கள், எழுது பொருட்கள், ஆன்மிகப் புத்தகங்கள், பதின்பருவ-சிறுவர் புத்தகங்கள் விற்பனைக்கு இருந்தன. இவ்றைத் தவிர, கண்காட்சிகளும் நடந்தன. 2014-ம் ஆண்டு ‘கமர்ஷியல் பிரஸ்’ எனும் பதிப்பகத்தின் நூற்றாண்டாகவும் அமைந்தது. அதையொட்டி, கடந்த 100 ஆண்டுகளில் ஹாங்காங்கின் பதிப்புத் தொழில் எப்படி மாறிவந்திருக்கிறது என்பதைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். அது ஹாங்காங்கின் வரலாறாகவும் இருந்தது. சில பழைய புத்தகங்களைத் தொட்டுத் தடவிப் புரட்டிப் பார்க்கவும் அனுமதித்தார்கள். டன் காய்-செங் எனும் வாழும் எழுத்தாளரைப் பற்றி ஒரு கண்காட்சியும், ‘ஹாங்காங் இலக்கியம்’ என்று இன்னொரு கண்காட்சியும் நடந்தன.

நான்காம் தளத்திலும் சில கருத்தரங்குகள் நடந்தன. ஆட்டோகிராஃப் மையங்களும் இருந்தன. நான் போனபோது யான் கேலிங் எனும் சீனப் பெண் எழுத்தாளர், தனது புத்தகங்களில் கையெழுத்திட்டுக்கொண்டிருந்தார். 200 பேர் வரிசையில் காத்துக்கொண்டிருந்தார்கள்.

புத்தகக் காட்சியின்போது நடத்தப்பட்ட கணிப்பு, பார்வையாளர்கள் சராசரியாக 987 ஹாங்காங் டாலர் (ரூ. 8,100) மதிப்புள்ள புத்தகங்கள் வாங்கியதாகத் தெரிவித்தது. கணிப்பில் பங்கெடுத்தவர்கள் சராசரியாக ஒரு மாதத்துக்கு 30 மணி நேரம் வாசிக்கிறார்கள் என்பதும் தெரிந்தது. இந்த வாசிப்புக்குக் காரணம், புத்தகக் காட்சிக்கு வெளியே இருக்கிறது.

பள்ளிகளில் ஆண்டுக்கு ஒரு முறை பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நடைபெறும். சீனப் பெற்றோர் அதிகமும் அறிவியல் பாடங்களைக் குறித்துக் கேட்க மாட்டார்கள். உரையாடல் மிகுதியும் சீன மொழிகுறித்தும், சீன வரலாற்றுப் பாடங்களைக் குறித்துமே இருக்கும். பல்கலைக்கழகங்களில் எல்லாத் துறைகளுக்கும் மதிப்பு உண்டு. மருத்துவமும் பொறியியலும் மட்டுமே செல்லப் பிள்ளைகள் இல்லை.

சலீம் அலி யார்?

தமிழகத்தில் 500-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இரண்டாண்டுகளுக்கு முன்னால் அப்படியான ஒரு கல்லூரியின் மாணவர்கள் சிலரோடு உரையாடும்போது பொதுஅறிவின் அவசியத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன். ஹாங்காங்கின் சுற்றுலாத் தளங்களில் முக்கியமானது ஓஷன் பார்க். இதில் பறவைகளுக்கான ஓர் அரங்கு இருக்கிறது. இதை வடிவமைத்த சீனக் கட்டிடக் கலைஞரை ஒரு விருந்தில் சந்தித்தேன். அவர் சொன்னார்: “ஒவ்வொரு பறவையின் வாழிடமும் எப்படி அமைய வேண்டும் என்று பறவையியல் வல்லுநர்கள் விளக்கினார்கள். சலீம் அலியின் புத்தகங்களைப் படித்திருந்ததால், அவர்கள் சொன்னவற்றை என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது.” மாணவர்களிடம் நான் உற்சாகத்தோடு பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், மாணவர்களிடம் உற்சாகம் தென்படவில்லை. நான் மெதுவாக, “சலீம் அலி தெரியும்தானே” என்று கேட்டேன். பதில் இல்லை.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்ட, நிறைவாழ்வு வாழ்ந்த ஒரு இந்தியப் பறவையியல் அறிஞரை மாணவர்கள் அறிந்திருக்கவில்லை. இது மாணவர்களின் பிழையன்று. விதியின் பிழையுமன்று. மதிப்பெண்களைத் துரத்துவதே கல்வி என்றாகிவிட்டது. பாடப் புத்தகங்களுக்கு அப்பால் இருக்கிற உலகம் சினிமாதான் - பெரும்பாலான ஊடகங்கள் அப்படித்தான் கட்டமைத்திருக்கின்றன. மொழியின் அருமையை, புத்தகங்களின் மதிப்பைக் கல்வித் திட்டமோ சமூகமோ அவர்களுக்குச் சொல்லுவதில்லை.

இப்படியான கல்வியின் குறைகளை விரைவில் சமூகம் உணரும். அப்போது மாணவர்கள் மட்டுமில்லை, ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஜன்னல்களைத் திறப் பார்கள். புதிய காற்று வீசும். புத்தகங்களின் அருமை புரியும். அப்போது சலீம் அலியை மட்டுமில்லை, மா. கிருஷ்ணனையும் தியடோர் பாஸ்கரனையும் அவர்கள் படித்திருப்பார்கள். அப்போது சென்னைப் புத்தகக் காட்சி இன்னும் பெரிய வளாகங்களுக்கு மாறியிருக்கும். அறிவுபூர்வமான பல கருத்தரங்குகளும் நடக்கும். அவற்றுள் ஒன்றில் அசோகமித்திரன் ‘மானசரோவர்’நாவலிருந்து சில பக்கங்களை வாசிப்பார். கூட்டத்தின் முடிவில் வாசகர்கள் அவரது கையெழுத்துக்காக வரிசையில் நிற்பார்கள்.

- மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்,
தொடர்புக்கு : mu.ramanathan@gmail.com
Comments