உலகின் தொழிற்சாலை ஆகுமா இந்தியா?

மு. இராமனாதன்


மனிதவளம் இருந்தால் மட்டும் போதாது; வாழ்க்கைத் தரமும் முக்கியம்.

உலகின் புகழ்பெற்ற தொழிலதிபர்கள் இன்று புதுடெல்லியில் கூடியிருக்கின்றனர். “வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்” என்று அவர்களிடம் அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மோடி. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் உலகெங்கும் உலா வர வேண்டும் என்கிற தனது கனவை, செங்கோட்டையில் நிகழ்த்திய சுதந்திர தின உரையில் பிரதமர் தெரிவித்தார்.

இப்போது இந்தியாவில் அந்நிய நிறுவனங்கள் அதிகமாக நிறுவியிருப்பவை கார் தொழிற்சாலைகளும் மருந்துத் தொழிற்சாலைகளும்தான். பிரதமரின் கனவு மெய்ப்பட்டால் இன்னும் பல்வேறு துறைகளைச் சார்ந்த உலகின் முன்னணித் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் தமது ஆலைகளை அமைக்கும். இதனால், இந்தியாவுக்கு அந்நிய முதலீடு வரும்; கூடவே தொழில்நுட்பமும் வரும். மேலும், இந்த நிறு வனங்கள் உற்பத்திசெய்யும் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியிராது. மிக முக்கியமாக, உள்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும். இந்தியா ‘உலகின் தொழிற்சாலை’யாக உருவாகும். ஆனால், இப்போது சீனாதான் ‘உலகின் தொழிற்சாலை’ என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

சாத்தியங்கள் எப்படி?

தொழிலாளர் புள்ளிவிவரக் குழு என்கிற சர்வதேச அமைப்பு, திறன் மிக்க ஓர் இந்தியத் தொழிலாளியின் ஒரு மணி நேர சராசரி ஊதியம் ரூ.90 என்று கணக்கிட்டிருக்கிறது. இது பல உலக நாடுகளைக் காட்டிலும் குறைவானது. சீனாவில் இந்த ஊதியம் இந்தியாவைப் போல் இரு மடங்கு. மேலும், சீனாவில் 18 வயதுக்கும் 64 வயதுக்கும் இடையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2010-ம் ஆண்டில் 73 கோடியாக இருந்தது. மக்கள்தொகைக் கணக்காளர்கள் இந்த வயது வரம்புக்குள் வருவோரை உழைக்கும் வயதில் உள்ளவர்கள் என்று வகைப்படுத்துகிறார்கள். இன்னும் 20 ஆண்டுகளில் சீனாவில் இது 60 கோடி யாகக் குறைந்துவிடும் என்று மதிப்பிட்டிருக்கிறது அமெரிக்காவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் குழு. இந்தியாவின் நிலைமையோ நேர்மாறாக இருக்கிறது. 2010 ஆண்டில் 65 கோடியாக இருந்த உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை 2030-ல் 68 கோடியாக உயரும். ஆக, நம் நாட்டில் மனிதவளம் இருக்கிறது; அது சகாயமாகவும் கிடைக்கிறது. மேலும், இந்திய நாணயம் சீன நாணயத்தைக் காட்டிலும் பலவீனமாக இருப்பது ஏற்றுமதியாளர்களுக்குச் சாதகமானது. என்றாலும், இந்தியா அல்ல, சீனாதான் ‘உலகின் தொழிற்சாலை’யாக விளங்குகிறது.

ஓர் ஒற்றுமை

ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம். சென்னை மெட்ரோ ரயிலின் சரிபாதித் தடம் சுரங்கப் பாதைகளால் அமைக்கப்படுகிறது. இதற்காக 12 இயந்திரங்கள் மண்ணடி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, எழும் பூர், கீழ்ப்பாக்கம், அண்ணா நகர் முதலான நகரின் பிரதானப் பகுதிகளில் சுரங்கம் தோண்டிவருகின்றன. சாலைப் போக்குவரத்தைப் பாதிக்காமல், நிலத்தடியில் 30 அடிக்கும், அதற்குக் கீழும் சுரங்கங்களை அமைக்கும் இந்த இயந்திரங்கள் அதிநவீனமானவை, விலைமதிப்புள்ளவை. இந்த 12 இயந்திரங்களில் மூன்று இயந்திரங்கள் சீன நிறுவனத்தையும், ஓர் இயந்திரம் அமெரிக்க நிறுவனத்தையும், மீதமுள்ள எட்டு இயந்திரங்கள் இந்தத் தொழில்நுட்பத்தில் முன்னோடியும் விற்பன்னருமான ஒரு ஜெர்மானிய நிறுவனத்தையும் சேர்ந்தவை. சென்னையில் சுழலும் இந்த இயந்திரங்களுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இந்த 12 இயந்திரங்களும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. இந்த நிறுவனங்கள் தமது ஆலைகளைச் சீனாவில் நிர்மாணித்திருக்கின்றன. சீனத் தொழிலாளிகளின் கரங்களில் அவை உருவாகின்றன.

இயந்திர ஆலைகள் மட்டுமில்லை; பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும் ஆயுதமும் காகிதமும் குடைகளும் உழுபடைகளும் கோணிகளும் இரும் பாணிகளும் இன்னும் பாரதி சொன்னவற்றையும் சொல்லாதவற்றையும் சீனர்கள் செய்து குவிக்கிறார்கள். அவை உலகெங்கும் வலம்வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சீனாவின் தொழில்துறையில் 13 கோடிப் பேருக்கு மேலதிகமாக வேலை கிடைத்திருப் பதாகச் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். சீனாவில் 1990-ல் வறுமைக்கோட்டுக்குக் கீழ் 60% பேர் இருந்தனர். 2012-ல் இது 12 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. கோடிக் கணக்கான மக்களை வறுமையின் பிடியி லிருந்து குறுகிய காலத்தில் மீட்டிருக்கிறது சீனா. இது உலக வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாதது.

ஏன் முடியவில்லை இந்தியாவால்?

இந்தியாவின் உள்கட்டமைப்பு பலவீனமாக இருக் கிறது என்கிறது தேஜான் ஷிரா என்கிற அந்நிய முதலீட்டு ஆலோசனை நிறுவனம். சாலைகள், பாலங் கள், ரயில், தண்ணீர், மின்சாரம் முதலானவை மேம் படுத்தப்பட வேண்டும். அந்நிய நிறுவனங்கள் சொல்கிற இன்னொரு குறைபாடு இந்தியாவின் தொழிற்சட்டங்கள் பழமையானவை, அவை உற்பத்திக்கு முன்னுரிமை வழங்குவதில்லை என்பதாகும். மேலும், இந்தியாவின் 80% தொழிலாளர்கள் அமைப்பு சாராதவர்கள். ஒப்பந்தக் கூலிகளாகவும் உதிரித் தொழிலாளிகளாகவும் பியூன்களாகவும் ஏ.டி.எம். காவலர்களாகவும் தங்களது உழைப்பை விழலுக்கு இறைத்துக்கொண்டிருப் பவர்கள்.

உள்கட்டமைப்பும் தொழிற்சட்டங்களும் சீரமைக்கப் பட வேண்டியவை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அவற்றைத் தவிர, இன்னும் இரண்டு அடிப்படையான அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் நோபல் விருது பெற்ற அமர்த்திய சென். அவைதான், கல்வியும் ஆரோக்கியமும். இப்போது உலகத்தின் தொழிற்சாலையாக விளங்கும் சீனாவிடமிருந்து இந்த விஷயத்தில் நாம் பாடம் கற்க வேண்டும் என்றும் சொல்கிறார் சென்.

அரசின் சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப் பின்படி இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 74% பேர். சீனாவில் இது 95%. 1990-லேயே சீனாவில் கல்வி கற்றோர் விகிதம் இந்தியாவின் தற்போதைய நிலையைக் காட்டிலும் உயர்வாக இருந்தது. இந்தியாவில் சுமார் 29 கோடி மக்களுக்குக் கல்வியறிவு இல்லை. உலகில் கல்வியறிவு இல்லாதவர்களில் மூன்றில் ஒருவர் இந்தியர். தவிர, இந்தியாவின் கல்வித் தரமும் கவலைக்குரியதாகத்தான் இருக்கிறது. ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் பெரும்பான்மையினரால் இரண்டிலக்கக் கழித்தல் கணக்கைப் போட முடிய வில்லை என்று தெரிவிக்கிறது ஐநா சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார அமைப்பு.

பொதுச் சுகாதாரமும் இந்தியாவில் பலவீனமாகத்தான் இருக்கிறது. இந்தியர்களின் தற்போதைய சராசரி ஆயுட்காலம் 65. ஒரு சராசரி சீனர், ஒரு சராசரி இந்தியரைக் காட்டிலும் 11 ஆண்டுகள் அதிகம் வாழ் கிறார். கல்வியைப் போலவே ஆயுட்காலக் கணக்கிலும் 1990-களிலேயே இந்தியாவின் நிலையைக் காட்டிலும் சீனாவின் நிலை உயர்வாக இருந்தது (69 ஆண்டுகள்). சீனா தமது தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீதத்தைச் சுகாதாரத்துக்காகச் செலவிடுகிறது. இந்தியாவில் இது 1.2% மட்டுமே.

இந்தியாவில் அரசுப் பள்ளிகளும் அரசு மருத்துவ மனைகளும் வக்கற்றவர்களின் புகலிடமாகி விட்டன. பொதுப் பள்ளிகளும் மருத்துவமனைகளும் எல்லோருக் குமானவையாக, தரம் மிக்கவையாக இருக்க வேண்டும். அதற்கு மக்களின் மனநிலையிலும் மாற்றம் வர வேண்டும்.

திறமையும் பயிற்சியுமே ஒரு நல்ல தொழிலாளியை உருவாக்கும். இதற்கு அடிப்படைக் கல்வியும் நல்ல ஆரோக்கியமும் அவசியம். தேசத்தின் உள் கட்டமைப்பையும் சட்டங்களையும் சீரமைக்கிறபோதே, கல்வியையும் சுகாதாரத்தையும் மேம்படுத்துகிற நீண்ட காலத் திட்டங்களையும் அரசு மேற்கொள்ள வேண்டும். அப்போது, இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் மனித வளத்தின் மதிப்பு உயரும்; இந்தியா உலகின் தொழிற் சாலையாகவும் மாறும்.

- மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
Comments