மியான்மரில் ஜனநாயகக் கீற்றுகள்

மு. இராமனாதன்இந்தத் தேர்தலால் மியான்மரில் ராணுவத்தின் ஆதிக்கம் குறைந்து, ஜனநாயகம் மலருமா?

ரங்கூன் நகரெங்கும் தோரணங்களாய் ஆடுகின்றன சிவப்புக் கொடிகள். அவற்றில் போராடும் பொன்னிற மயிலொன்றின் சித்திரமும் இருக்கிறது. எதிர்க் கட்சியான தேசிய ஜனநாயக லீக்கின் கொடிகள் அவை. கூடவே, கட்சித் தலைவி ஆங் சான் சூச்சியின் படங்களும் காற்றில் அசைகின்றன. ராணுவத்தின் ஆசியுடன் இயங்கும் ஆளுங்கட்சியின் பச்சை நிறக் கொடிகளும் இடையிடையே ஆடத்தான் செய்கின்றன. மியான்மர் என்று ராணுவத் தளபதிகளால் பெயர் மாற்றப்பட்ட பர்மா வரும் நவம்பர் 8 அன்று தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறது. இப்படியொரு பிரச்சாரம் மியான்மரில் நடக்கும் என்று ஐந்தாண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். அப்போது ராணுவத்தின் இரும்புப் பிடியில் இருந்தது மியான்மர்.

இப்போது சூழலை நிறைத்துக் கேள்விகள்: இந்தத் தேர்தல் முறையாக நடக்குமா? ராணுவத்தின் ஆதிக்கம் குறையுமா? ஜனநாயகம் மலருமா? ஆங் சான் சூச்சியால் அதிபராக முடியுமா?

அரசியலும் ராணுவமும்

பர்மாவின் அரசியல் வரலாறு மிகுதியும் ராணுவத்தின் கரங்களால்தான் எழுதப்பட்டிருக்கிறது. 1948-ல் நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. அதற்கு முன்பாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்துக்குத் தலைமை தாங்கியவர் ஆங் சான். சூச்சியின் தந்தை. ஆங் சான், பர்மிய விடுதலைப் படை என்கிற ராணுவ அமைப்பைக் கலைத்துவிட்டு அரசியல் கட்சி ஆரம்பித்தார். ஆனால், நாடு விடுதலை அடையுமுன்பே அவரது அரசியல் எதிரிகளால் கொல்லப்பட்டார். அவரது சகாக்கள் ஆட்சியிலும் ராணுவத்திலும் தலைமை ஏற்றனர். 1958-ல் நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டதன் பேரில் ஒரு இடைக்கால ஆட்சி நடத்திய ராணுவம், 1962-ல் தானே நேரடியாக ஆட்சியைக் கைப்பற்றியது. இது 2011 வரை நீடித்தது.

ராணுவ ஆட்சிக்கு எதிராக 1988-ல் மாணவர்கள் போராடினார்கள். அப்போது ஆங் சான் சூச்சி நோய்வாய்ப்பட்டிருந்த தன் தாயாரைப் பார்ப்பதற்காக ரங்கூன் வந்திருந்தார். ஆக்ஸ்போர்டில் பேராசிரியராகப் பணியாற்றிய ஆங்கிலேயக் கணவரையும் இரண்டு மகன்களையும் லண்டனில் விட்டுவிட்டு வந்திருந்தார் சூச்சி. போராட்டம் அவரையும் ஈர்த்தது. தேசிய ஜனநாயக லீக்கைத் (என்.எல்.டி) தொடங்கினார். ராணுவம் போராட்டத்தை ஒடுக்கிவிட்டது. 1989-ல் சூச்சியையும் வீட்டுக் காவலில் வைத்தது. அடுத்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில்தான் இருந்தார். 1990-ல் ராணுவம் தேர்தல் நடத்தியது. 492 இடங்களில் 392-ஐக் கைப்பற்றியது என்.எல்.டி. ஆனால், ராணுவம் பதவி விலக மறுத்துவிட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ல் நடந்த தேர்தலை என்.எல்.டி புறக்கணித்தது. ராணுவத்தின் ஆதரவுள்ள யு.எஸ்.டி.பி. வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் ராணுவத் தளபதி தெயின் செயின் அதிபரானார். தொடர்ந்து அவர் அமல்படுத்திய அரசியல்-பொருளாதாரச் சீர்திருத்தங்கள் யாரும் எதிர்பார்க்காதவை. பதவியேற்ற சில மாதங்களிலேயே சூச்சியை விடுவித்தார். 2012-ல் நடந்த இடைத் தேர்தலில் என்.எல்.டி. போட்டியிட்டது. 45 இடங்களில் 43-ல் வெற்றி பெற்றது. சூச்சி எதிர்க் கட்சித் தலைவரானார்.

இப்போது மீண்டும் பொதுத்தேர்தல் வந்திருக்கிறது. 1990, 2012 தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்த்தால், என்.எல்.டியின் பொன்னிற மயில் தன் சிறகை விரித்தாடப்போகிறது என்று தோன்றக்கூடும். மியான்மரின் அரசியலுக்கு இன்னும் சில பக்கங்கள் உண்டு.

பெரும்பான்மையும் சிறுபான்மையும்

2008-ல் அமலான அரசியல் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தில் 25% இடங்கள் ராணுவத்துக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 75% இடங்களுக்குத்தான் தேர்தல் நடக்கிறது. மியான்மர் பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு. ‘பாமா’எனப்படும் பெரும்பான்மை பர்மிய சமூகத்தினர் ஐராவதி நதி பாயும் வளமான மையப் பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் வசிக்கின்றனர். 2012 இடைத்தேர்தல் மிகுதியும் இந்தப் பகுதிகளில்தான் நடந்தது. இங்கேயுள்ள 291 இடங்களில் என்.எல்.டிக்கு கணிசமான ஆதரவு இருக்கிறது. மொத்தமுள்ள இடங்களில் இது 44% ஆகும்.

சிறுபான்மையினர் எல்லைப்புற மாநிலங்களில் வசிக்கின்றனர். இங்கேயுள்ள 207 இடங்கள் (31%) முடிவுகளை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். மியான்மரில் 135 சிறுபான்மை தேசிய இனத்தவர் உள்ளனர். இதில் ஷான், கரீன், ரக்கைன், சின், கச்சின் ஆகியோர் பிரதானமானவர்கள். இவர்களில் பல ஆயுதக் குழுக்கள் பிரிவினை கோருகின்றன.

சூச்சி சிறுபான்மையினரின் வாக்குகளைச் சேகரிப்பதிலும் மும்முரமாக உள்ளார். ரக்கைன் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் சூச்சியின் பிரச்சாரத்துக்கு நல்ல வரவேற்பு இருந்ததாக எழுதுகிறார், அவருடன் பயணித்த ரெயிடர்ஸ் செய்தியாளர். இத்தனைக்கும் அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகும் ரோஹின்ஜா எனும் முஸ்லிம் பிரிவினர், இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். இவர்கள் மியான்மரின் குடிமக்களாக அங்கீகரிக்கப்படவில்லை. இவர்கள் அகதிகளாகப் படகுகளில் தப்பி ஓடுவதும் அண்டை நாடுகள் ஏற்க மறுப்பதும் தொடர்ந்துவருகிறது. இந்தப் பிரச்சினையில் சூச்சி மவுனம் காத்துவருகிறார். எனினும், சிறுபான்மையினர் மத்தியிலும் சூச்சிக்குச் செல்வாக்கு இருப்பதாகவே மேற்கு ஊடகங்கள் கணிக்கின்றன. பல சிறுபான்மைக் கட்சிகளும் களத்தில் உள்ளன. இவர்கள் கணிசமான இடங்களைப் பெறலாம்; தங்களுக்குள் வாக்குகளைப் பிரித்துக்கொண்டு என்.எல்.டிக்கு வழிவிடவும் செய்யலாம்.

சில சிறுபான்மை இனத்தவருக்கு இணையான மக்கள்தொகை பர்மியத் தமிழர்களுக்கும் இருக்கிறது (சுமார் 2%). சிறிய விவசாயிகளாகவும் வர்த்தகர்களாகவும் நாட்டின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. எனில், இளைய தலைமுறையினர் மாறிவரும் அரசியல் சூழலுக்குத் தங்களைத் தகவமைத்துக்கொள்வதில் விருப்பம் உடையவர்களாக இருக்கின்றனர்.

அரசியல் சட்டத் தடைகள்

சூச்சிதான் என்.எல்.டியின் நட்சத்திரம். அவர் வெற்றி நோக்கி கட்சியை வழி நடத்தலாம். ஆனால், அவரால் அதிபராக முடியாது. சூச்சியின் இரண்டு பிள்ளைகளும் பிரிட்டிஷ் குடிமக்கள். புதிய அரசியல் சட்டத்தின் 59 எஃப் பிரிவின்படி, அதிபராக இருப்பவரின் பிள்ளைகள் அந்நிய நாடொன்றுக்கு விசுவாசமாக இருக்கக் கூடாது. இந்தப் பிரிவை விலக்குவதற்கு சூச்சி மேற்கொண்ட முயற்சிகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. இப்போது சூச்சியும் தனது வழிமுறையை மாற்றிக்கொண்டார். என்.எல்.டி வெற்றி பெற்றால் தன்னால் அதிபராக முடியாவிட்டாலும், ‘அரசாங்கத்தின் தலைவராக நான்தான் இருப்பேன்’ என்று சமீபத்தில் சொல்லியிருக்கிறார்.

மேலும், அதிபர் தேர்வும் நேரடியானதல்ல; தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும், ராணுவத்தின் நியமன உறுப்பினர்கள் ஒருவரையும் முன்மொழிய வேண்டும். இதில் வெற்றி பெற்றவர் அதிபராகவும், மற்ற இருவரும் துணை அதிபர்களாகவும் பதவியேற்க வேண்டும். இதைத் தவிர பாதுகாப்பு, உள்துறை, நிதி போன்ற துறைகளுக்கான அமைச்சர்களை ராணுவமே நியமிக்கும். பொதுத் தேர்தல் நவம்பரில் நடந்தாலும், அதிபர் தேர்தல் மார்ச் 2016-ல்தான் நடக்கும். அதற்குள் திரைக்கு முன்னும் பின்னும் பல காட்சிகள் அரங்கேறலாம்.

சிறிய அடிகள்

பர்மிய அரசியல் வரலாறு நெடுகிலும் ராணுவத்தின் செல்வாக்கும் ஆதிக்கமும் இருந்துவருகிறது. 2011-ல் பதவியேற்ற சிவில் அரசாங்கம் சில சீர்திருத்தங்களை முன்னெடுத்திருக்கிறது. இந்தத் தேர்தல் அவற்றுள் ஒன்று. இதில் என்.எல்.டி. வெற்றி பெற்றாலும் ராணுவத்தின் உதவியின்றி ஆட்சி நடத்த முடியாது. எனினும், மியான்மரின் ஜனநாயகப் பாதையில் இது ஒரு முக்கியமான அடிவைப்பாக இருக்கும். போகும் வழி வெகு தூரமுண்டு!

- மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர், முஹம்மது யூனூஸின் ‘எனது பர்மா குறிப்புகள்’ நூலின் தொகுப்பாசிரியர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
Comments