அடுக்கக விதிகளை விரிவுபடுத்துவோம்

மு. இராமனாதன்


வெளிநாடுகளில் இருப்பதுபோன்ற கட்டுமான விதிகள் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

மவுலிவாக்கம் கட்டிட விபத்து | கோப்பு படம்

கடந்த ஆண்டு ஜூன் 28 அன்று அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. 61 பேர் பலியாயினர். மவுலிவாக்கம் என்ற பெயர் சென்னையைத் தாண்டி, இந்தியாவைக் கடந்து, உலக நாக்குகளில் புரண்டது.

இந்த விபத்துக்கு விதிமீறல்கள்தான் காரணம் என்றனர் சிலர். சென்னையில் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கான ஒப்புதல்கள் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ) ‘வளர்ச்சி விதி’களின்படி வழங்கப்படுகின்றன.

மனை அமைந்திருக்கும் சாலையின் அகலத்தைப் பொறுத்து, கட்டிடத்தைச் சுற்றிலும் இடைவெளிகள் இருக்க வேண்டும். மனையின் பரப்பைப் பொறுத்து கட்டுமானப் பரப்பு நிர்ணயிக்கப்படும். இன்னும் வாகன நிறுத்தம், கட்டிடத்தின் உயரம், மழை நீர் சேகரிப்பு போன்ற பலவும் விதிகளில் இடம்பெறுகின்றன.

இந்தியாவின் பிற நகரங்களிலும் இவ்வாறான ‘வளர்ச்சி விதிகள்’ அமலில் உள்ளன. மவுலிவாக்கம் கட்டிடத்துக்கு இந்த விதிகளின்படியே ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பிறகு எங்கே தவறு நேர்ந்தது? விபத்து நடந்த உடனேயே ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம், பொதுப்பணித் துறை ஆகிய நிறுவனங்களின் வல்லுநர்கள் குழுவில் இடம்பெற்றனர். அவர்கள் கண்டறிந்த சில குறைபாடுகள் வருமாறு: கான்கிரீட்டின் அடர்த்தி குறைவாக இருந்தது. இடிபாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட ஊடுகம்பிகள் தரம் தாழ்ந்தவையாக இருந்தன. அடித்தளம் அமைக்கப்பட்ட ஆழத்தில் மண்ணின் தாங்குதிறன் போதுமானதாக இல்லை. முக்கியமாக, வாகனங்கள் நிறுத்துவதற்கான கீழ்த்தளத்தில் வரைபடத்தில் காட்டப்பட்டிருந்த சில தூண்கள் கட்டப்படவேயில்லை.

பொறியியல் வரைபடங்கள்

மவுலிவாக்கம் செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாயின. அவற்றை வாசித்த என்னுடன் பணியாற்றும் சீனப் பொறியாளர்களால் இதை நம்ப முடியவில்லை. வரைபடத்தில் உள்ள தூண்களை ஒப்புதல் இல்லாமல் எப்படி நீக்க முடியும் என்று கேட்டார்கள். ஹாங்காங்கில் இப்படி நடக்காது. வளர்ந்த நாடுகள் எங்கும் நடக்காது. ஏனெனில், அங்கெல்லாம் கட்டிடத்தின் விரிவான பொறி யியல் வரைபடங்களை அரசு அங்கீகாரம் பெற்ற கட்டமைப்புப் பொறியாளர் (ஸ்ட்ரக்சுரல் இன்ஜினீயர்) சமர்ப்பிக்க வேண்டும். இதுபோன்ற 11 மாடி அடுக்ககத்துக்குச் சுமார் 200 பொறியியல் வரைபடங்கள் வேண்டிவரும். தளங்கள், உத்தரங்கள், தூண்கள், அடித்தளங்கள் முதலான அனைத் துக் கட்டமைப்பு உறுப்புகளின் விவரங்களும் வரைபடங் களில் இடம்பெறும். இத்துடன் விரிவான கணக்கீடுகளும் மண் பரிசோதனை அறிக்கைகளும் சமர்ப்பிக்க வேண்டும். கட்டிடம் முறையாகக் கட்டப்படுகிறதா என்று கண்காணிக்கிற பொறுப்பும் பொறியாளருக்கு உண்டு.

ஆனால், இவை எதுவும் சென்னையில் மட்டுமில்லை, இந்திய நகரங்கள் பலவற்றிலும் கட்டாயமில்லை. மேற்குறிப் பிட்ட ‘வளர்ச்சி விதி’களின்படி திட்ட வரைபடங்களைக் கட்டிடக் கலைஞர் (ஆர்கிடெக்ட்) சமர்ப்பிப்பார். அதனடிப் படையில் ஒப்புதல் வழங்கப்படும். இந்தியாவில் பொறியியல் வரைபடங்கள் கோரப்படுவதில்லை. கட்டிடத்தின் தரத்துக்கும் உரிமையாளரே பொறுப்பு. விரிவான விதிகள் இல்லாமல், எல்லா உரிமையாளர்களும் முறையாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

மூன்று சம்பவங்கள்

இப்போதைய விதிகள் போதுமானவையல்ல என்பதற்கும் பொறியியல் வரைபடங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்பதற்கும் சமீபத்தில் நடந்த மூன்று சம்பவங்களைக் குறிப்பிடலாம்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சி.எம்.டி.ஏ., கட்டிடக் கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தது. ஒரு கட்டிடத்தின் பணி நிறைவடையும்போது கட்டிடக் கலைஞர் கட்டமைப்பு பொறியாளருடன் இணைந்து கட்டிடம் வலுவானது என்று சான்றளிக்க வேண்டும் என்பதே அது. இந்தியக் கட்டமைப்புக் கழகம் (ஐ.ஐ.ஏ) இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்திய தேசிய கட்டிட விதித் தொகுப்பின்படி, கட்டிடக் கலைஞர்கள் கட்டமைப்பின் வலிமைக்குப் பொறுப்பேற்க வேண்டாம் என்பது அவர்கள் வாதம். அடுக்கக உரிமையாளர்கள் பலரும் பணி நடக்கும்போது தங்களை மேற்பார்வையிடப் பணிப்பதில்லை என்றும் சில கட்டிடக் கலைஞர்கள் தெரிவித்தனர். கட்டிடக் கலைஞரும் கட்டமைப்புப் பொறியாளரும் தரத்துக்குப் பொறுபேற்க வேண்டுமென்பது சரியானது. ஆனால், அதை நடைமுறைப்படுத்த விதிகளை விரிவுபடுத்த வேண்டும்.

இரண்டாவது சம்பவம் - இவ்வாண்டுத் தொடக்கத்தில் சி.எம்.டி.ஏ. 37 அடுக்ககங்களின் பணியை நிறுத்தி வைத்தது. குற்றங்கள் பாரதூரமானவை. அனுமதிக்கப்பட்ட தளங்களைக் காட்டிலும் கூடுதல் தளங்களைக் கட்டியது, அத்தியாவசியமான சில தூண்களை அகற்றியது போன்றவை. இவையெல்லாம் ஒப்புதல் வழங்கப்பட்ட திட்ட வரைபடங்களின் விதி மீறல்கள். பொறியியல் வரைபடங்கள் சமர்ப்பிக்கப்படாததால் அவற்றில் மீறல்கள் நடந்திருக்கின்றனவா என்பது தெரியவில்லை.

மூன்றாவது - இரண்டு மாதங்களுக்கு முன்னால் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள கட்டிடங்கள் நிலநடுக்கத்தை எதிர்கொள்கிற விதத்தில் வடிவமைக்கப்படவில்லை என்று வல்லுநர்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தை மனித எத்தனத்தால் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், அவை நிகழும் சாத்தியங்கள் உள்ள பகுதிகளைக் கணிக்க முடியும். அந்தப் பகுதிகளில் நிலநடுக்கத்தை நேரிடுகிற ஒசிவுத் தன்மையுடன் கட்டிடங்களை வடிவமைக்க முடியும். இந்தியா நான்கு நிலநடுக்கப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது- குறைவானது, மிதமானது, தீவிரமானது, மிகத் தீவிரமானது. சென்னை மிதமான பாதிப்புப் பகுதி. அடுக்ககங்கள் அதற்கேற்றாற் போல் வடிவமைக்கப்பட வேண்டும். அதைப் பரிசோதிக்க பொறியியல் வரைபடங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

படிப்பும் பயிற்சியும்

பொறியியல் வரைபடங்களைத் தயாரிப்பதற்கும், பணியை மேற்பார்வையிடுவதற்கும் தகுதி வாய்ந்த கட்டமைப்புப் பொறியாளர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். பொறியியல் படிப்பை முடித்ததும் ஒருவர் பொறியாளர் ஆகிவிடுவதில்லை. தொடர்ச்சியான படிப்பும் பயிற்சியும் தேவை. ஹாங்காங்கில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வடிவமைப்பிலும் களப்பணியிலும் அனுபவம் பெற்ற பொறியியல் பட்டதாரிகள் ஹாங்காங் பொறியாளர் கழகத்தின் தேர்வை எதிர்கொள்ளலாம். தேர்வு பெற்றவர்கள் கழகத்தின் உறுப்பினர்களாக முடியும். இவர்களில் விருப்பமுள்ளவர்கள் அரசு அங்கீகாரத்துக்கான அடுத்த கட்டத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் கடுமையானவை. ஹாங்காங் அடுக்ககங்களுக்குப் பெயர் போனது. அவை நல்ல தரத்திலும் போதுமான பாதுகாப் போடும் கட்டப்படுவதற்கு விரிவான விதிமுறைகளும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தனியார் துறைப் பொறியாளர்களுக்கும் கட்டிடக் கலைஞர்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கும் பங்கும் முக்கியக் காரணிகளாகும். இவர்களுக்குப் பொறுப்பு உண்டு, அதிகாரம் உண்டு, தவறிழைத்தால் தண்டனையும் உண்டு.

தற்போது இந்தியப் பொறியியல் கழகத்தில் பொறியியல் பட்டமும் எட்டு ஆண்டு அனுபவமும் உள்ளவர்கள் உறுப்பினர்களாகிவிடலாம். கழகம், வளர்ந்த நாடுகளைப் போல் உறுப்பினராவதற்குத் தேர்வு முறையைக் கொண்டுவர வேண்டும். கழகத்தின் உறுப்பினர்களிலிருந்து தகுதியான பொறியாளர்களைத் தெரிவு செய்யலாம். இது நடைமுறைக்கு வரும்வரை மைய - மாநில அரசுகளின் பணியாளர் தேர்வாணையங்கள் கட்டமைப்புப் பொறியாளர்களுக்குத் தேர்வுகள் நடத்தலாம்.

விரிவான விதிகள்

அடுக்ககங்களுக்குப் பொறியியல் வரைபடங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். பணி நடைபெறும்போது கண்காணிப்பும் வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்தத் தகுதிவாய்ந்த பொறியாளர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

‘இந்தியாவில் எல்லாவற்றுக்கும் விதிகள் உள்ளன; அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் சுணக்கம் உள்ளது’ என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், அடுக்ககங்களைப் பொறுத்தமட்டில் இப்போதுள்ள விதிகள் போதாது. அவற்றை விரிவுபடுத்த வேண்டும். அரசு நிறுவனங்களும் கல்வி நிலையங்களும் பொறியியல் கழகங்களும் இது குறித்துச் சிந்திக்க வேண்டிய தருணமிது. மவுலிவாக்கத்தின் நினைவுநாள் அதற்குத் தொடக்கம் குறிக்கட்டும்.

- மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
Comments