கில்மோரின் கட்டில்

பதிவு: தில்லி தமிழ்ச் சங்கம், புதுதில்லி, பிப்ரவரி 25, 2012

கில்மோரின் கட்டில்

மு.இராமனாதன்
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை நூல் உருவானவிதம் வித்தியாசமானது. அதன் உள்கதையின் சில பகுதிகளை நான் அறிவேன். அவற்றைக் குறித்தும் நூலாசிரியரைக் குறித்தும் சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு சிறிய கதையிலிருந்து தொடங்கலாம். டீன் கில்மோர் நடிகர், நாடக ஆசிரியர், இயக்குநர், கனடாவில் இருக்கும் டொரன்டோவில் வசிக்கிறார். அ. முத்துலிங்கம் இலங்கைத் தமிழ் எழுத்தாளர். அவரும் டொரன்டோவில் வசிக்கிறார். கில்மோரின் நாடகங்களைப் பார்த்துப் பிரமித்த முத்துலிங்கம், அவரைச் சந்தித்து உரையாடுகிறார். அது 2004ஆம் ஆண்டு. அப்போது ரஷ்ய மேதை செக்கோவின் ஆறாம் வார்டு என்னும் நீண்ட சிறுகதையை கில்மோர் நாடகமாக்கி மேடையேற்றியிருந்தார். ஒரு காட்சியில் மனநல மருத்துவமனைக் கட்டிலொன்று வேகமாகத் தள்ளப்பட்டுத் திறந்த மேடைமீது வந்து நிற்க வேண்டும். அந்தக் கட்டில் மேடையில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேர்வதற்கு, எப்படித் திரும்பத் திரும்ப ஒத்திகை பார்க்கப்பட்டது என்று முத்துலிங்கத்திடம் விளக்குகிறார் கில்மோர். அந்தக் கட்டில் குறிப்பிட்ட இலக்கைவிட ஒன்றிரண்டு அடிகள் தள்ளியோ அல்லது ஒன்றிரண்டு நொடிகள் பிந்தியோ வந்து சேர்ந்தால் என்ன? பார்வையாளர்களுக்குத் தெரியப்போவதில்லை. உண்மைதான். ‘ஆனால் அது எனக்குத் தெரியும்’ என்று சொல்கிறார் கில்மோர். அந்தக் கட்டில் ஓர் அங்குலம் முன்பின்னாகவோ ஒரு நொடி பிந்தியோ மேடையில் தோன்றினால் அது கில்மோருக்குத் தெரிந்துவிடும். ஒரு நல்ல நாடகத்தை உன்னதமாக்குவது உழைப்புதான் என்கிறார் கில்மோர். ஒரு நல்ல நாடகத்தின் வெற்றி கண்ணுக்குத் தெரியாத சின்னச் சின்ன நுட்பமான அம்சங்களில் இருக்கின்றன. சாதாரணமாக இவை பார்வையாளர்கள் கண்ணில் படமாட்டா. ஆனால் அதை இயக்கியவருக்குத் தெரியும்.

முத்துலிங்கத்தின் கில்மோருடனான நேர்காணலை வாசித்தபோது நான் பெரிதாகப் பரவசமடையவில்லை. நான் வசிக்கிற ஹாங்காங்கில் கில்மோரை ஒத்த ஒரு நபரை நான் சந்தித்திருந்தேன். 2002ஆம் ஆண்டில் ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் நிரபராதிகளின் காலம் என்றொரு நாடகத்தை அரங்கேற்றியது. சீக்பிரெட் லென்ஸ் என்பவர் எழுதிய ஜெர்மானிய நாடகத்தின் தமிழ் வடிவம். மேடையில் எப்போதும் ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். வாழ்க்கையின் பல வழித்தடங்களில் பயணிப்பவர்கள். ஒரு நேரத்தில் ஒருவர் தானே பேச முடியும்? அப்போது மற்றவர்கள் என்ன செய்வது? இதற்காக இந்த நாடகத்தை இயக்கிய ‘ஹாங்காங் கில்மோர்’ அசைவுப் பிரதியொன்றை எழுதினார். அதில் நடிகர்கள் எந்தெந்த இடத்தில் நிற்க அல்லது உட்கார அல்லது சரிந்துகொள்ள வேண்டும், என்ன விதமான உணர்ச்சிகளை வெளிக்காட்ட வேண்டும், அவர்களது உடல் மொழி, அங்க அசைவுகள் எப்படியிருக்க வேண்டும், என்பவற்றை விரிவாக எழுதிக் கொடுத்திருந்தார். இந்த நாடகத்தில் நானும் ஒரு ‘நிரபராதி’. பெரும்பாலும் பின்னால்தான் இருப்பேன். மைய அரங்கில் நடைபெறும் உரையாடல்களில் என் பாத்திரத்தின் அசுவாரசியத்தைக் காட்ட உள்ளங்கைகளை வைத்து விளையாடிக்கொண்டிருக்க வேண்டும். ஒத்திகைகளில் நான் இவ்வாறான அசைவுகளைத் தவறவிட்டுக் கொண்டே இருப்பேன். இயக்குநர் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் நான் வெறுத்துப் போய்க் கேட்டேன், ‘மேடையில் இத்தனை பேர் இருக்கிறார்கள், நான் பின்னால் இருக்கிறேன், சில அசைவுகளை நான் செய்யாமல் போனால் அது யாருக்குத் தெரியப் போகிறது?’ இயக்குநர் என் கேள்விக்கு நேரடியாக விடையளிக்கவில்லை. ஆனால் நடிகர்கள் அனைவரும் அசைவுப் பிரதியை அட்சரம் பிசகாமல் பின்பற்ற வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு என் கேள்விக்கு விடை கிடைத்தது. ஹாங்காங் இயக்குநரிடமிருந்து அல்ல. டொரன்டோ இயக்குநரிடமிருந்து. விடை: ‘அது எனக்குத் தெரியும்.’ அந்த ஹாங்காங் இயக்குநர் - ஸ்ரீதரன்- தனது இலக்கைத் தெளிவாக நிர்ணயித்துக்கொண்டிருப்பவர். அதை அடைவதற்குக் கடுமையாக உழைக்கத் தயங்காதவர். அவரது உழைப்பின் மற்றொரு கனிதான் இன்று வெளியிடப்படும் நூல். சீனத் தொன்மை இலக்கியமான ஷிழ் சிங் ஸ்ரீதரனின் மொழியாக்கத்தில் கவித்தொகையாக வெளியாகிறது

ஸ்ரீதரன் 1996இல் இந்திய வெளியுறவுத் துறைப் பணியில் சேர்ந்தார். 1998இல் மூன்றாம் செயலராகப் பெய் ஜிங்கில் பணியமர்த்தப்பட்டார். ஐ.எப்.எஸ். அலுவலர்கள் வெளிநாட்டு மொழியொன்றைக் கற்க வேண்டுமென்பது விதி. ஸ்ரீதரன் சீன மொழியைத் தேர்ந்தெடுத்தார். சீன மொழி கடினமானது. மொழி பற்றிய நமது அடிப்படைப் புரிதல்களைக் கேள்விக்குள்ளாக்கக் கூடியது. சீன மொழியைக் கற்கத் திறந்த மனமும் வியப்பின் சுவையும் உழைப்பின் வலிவும் தேவை. ஸ்ரீதரன் சீன மொழியைக் கற்றுத் தேர்ந்தார். தான் பெற்ற கல்வியை மற்றவர்களேடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விழைந்தார். அந்த விருப்பத்தைச் சுமந்தபடியே 2000ஆம் ஆண்டில் ஹாங்காங் வந்தார். ஹாங்காங் இந்தியத் துணைத் தூதரகத்தில் அதிகாரியாகப் பணியேற்றார். அங்கேதான் நான் அவரைச் சந்தித்தேன். நாங்கள் நண்பர்களானோம்.

2002 - 2003ஆம் ஆண்டுகளில் நான் ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் தலைவராக இருந்தேன். அப்போதுதான் முன்னர் குறிப்பிட்ட ஜெர்மானிய நாடகம் அரங்கேறியது. இதே காலகட்டத்தில்தான் ஸ்ரீதரன் எழுதிய சீன மொழி - ஓர் அறிமுகம் என்னும் நூலை வெளியிட்டுக் கழகம் பெருமையுற்றது. ஓர் இந்திய மொழியின் வாயிலாகச் சீன மொழியைக் கற்பிக்கும் முயற்சியில் இந்நூல் முதன்மையானது. சீனமும் தமிழும் செம்மொழிகள். ஈராயிரம் ஆண்டுகட்கும் மேலான பழமை வாய்ந்தவை. இரண்டுமே ஆசியாவில் பரவலாகப் பேசப்படுபவை. ஆயினும் இவ்விரு மொழிகளுக்கு இடையேயான உறவு அரிதாகவே இருந்து வந்திருக்கிறது. தமிழ் அறிந்தவர்களுக்கு இப்போது புழக்கத்தில் உள்ள முறைகளைவிடத் தமிழிலிருந்து நேரடியாகச் சீன மொழியைக் கற்பது எளிதானது என்று ஸ்ரீதரன் இந்த நூலில் நிறுவியிருக்கிறார். இந்த நூலைக் குறித்துச் சீன - இந்திய ஊடகங்கள் சிறப்பாகச் செய்தி வெளியிட்டிருந்தன. நூல் வெளியான சில தினங்களுக்குப் பிறகு ஹாங்காங் இந்தியத் துணைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டேன். தூதர் சிவசங்கர் மேனன் அவர்கள்தான் சிறப்பு விருந்தினர். அப்போது அவர் சீனாவிற்கான இந்தியத் தூதராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். என்னை அவரிடம் ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் என்று அறிமுகப்படுத்தி வைத்தார்கள். தூதர் என் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் குலுக்கினார். எனக்கு வியப்பாக இருந்தது. ஒரு தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருப்பது பெரிய காரியமா என்று எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன். அப்போது கழகத்தில் 150 உறுப்பினர்கள் இருந்திருப்பார்கள். அவரது நட்பு மிகுந்த கைகுலுக்கலுக்கான காரணம் சில நொடிகளில் துலங்கியது. ஸ்ரீதரனின் நூலை வெளியிட்டமைக்காக மேனன் அவர்கள் ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தை உவந்து பாராட்டினார். சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான இலக்கிய-பண்பாட்டுத் தளங்களில் இந்நூல் ஒரு மைல் கல்லாக விளங்கும் என்றார்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு மேனன் அவர்களை மீண்டும் சந்திக்கிற வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்திருக்கிறது. இப்போது நாம் இன்னுமொரு மைல் கல்லை எட்டியிருக்கிறோம். ஸ்ரீதரனின் மேலதிக முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நூலை இன்று அவர் வெளியிடுகிறார்.

ஹாங்காங்கிலிருந்து ஸ்ரீதரன் 2003ஆம் ஆண்டு துணைச் செயலராகத் தில்லியிலும் 2005இல் முதன்மைச் செயலராகப் பெய்ஜிங்கிலும் பணியமர்த்தப்பட்டார். இது பெய்ஜிங்கில் அவரது இரண்டாம் பணிக்காலம். முதல் சுற்றில் சீன மொழியைக் கற்ற அவர் இரண்டாம் சுற்றில் கவித்தொகையைக் கற்றார். சீன மாணவர்களுக்குச் சீன இலக்கியத்தைப் பயிற்றுவிக்கும் பீகிங் பல்கலைக்கழகத்தில் சீன இலக்கியத் துறையின் தலைவர் பேராசிரியர் ட்ச்சீ யோங்ஷ்ஸியாங் (Qi Yongxiang), பெய்ஜிங் மேலாண்மைக் கல்லூரியின் மொழித் துறை ஆசிரியர் திருமதி ட்ச்சாங் யிங்ஹுவா (Zhang Yinghua) ஆகிய இருவரிடமும் கவித்தொகை பாடம் கேட்டார். தனது வீட்டில் ஒரு மொழிபெயர்ப்புக் கலந்துரையாடல் குழுவை உருவாக்கினார். சீன வானொலி நிலையத்தில், தமிழ்ப் பிரிவில் பணியாற்றிய தமிழர்களான மரியா மைக்கிள், அந்தோனி கிளீட்டஸ், தமிழ் படித்த சீனர்களான ட்ஸோவ் ட்ஸூஹுவா (Zou Zihua), செல்வி ஹான் ச்சோங் (Han Chong) ஆகியவர்களோடு ஸ்ரீதரனின் மனைவி வைதேகியும் சேர்ந்துகொண்டார். ஸ்ரீதரனோடு குழுவில் அறுவரானார்கள். இந்தக் குழு சனிக்கிழமைதோறும் கூடியது. அதில் ஸ்ரீதரன் மொழிபெயர்ப் பின் கரட்டு வடிவங்களை முன்வைத்து உரையாடல்களை நடத்தினார். அந்தக் காலகட்டத்தில் ஹாங்காங்கிற்கும் சீனாவிற்கும் இடையேயான தொலை பேசிக் கட்டணத்தைக் குறைத்துக்கொண்டே வந்தார்கள். ஒரு கட்டத்தில் இந்தச் சேவையை இலவசமாக்கி விடுவார்களோ என்றுகூட நினைத்தோம். இது எனக்கு வாய்ப்பாக அமைந்தது. ஞாயிற்றுக்கிழமைதோறும் ஸ்ரீதரனோடு மணிக்கணக்கில் உரையாடுவேன். அவர் கவித்தொகை மொழியாக்கத்தில் ஏற்பட்டுவந்த முன்னேற்றங்களைச் சொல்வார்.

தொடர்ச்சியான வகுப்புகளும் உரையாடல்களும் ஆய்வுகளும் இரண்டாண்டுகள் நீண்டன. இப்போது ஸ்ரீதரன் தனது மொழிபெயர்ப்பை இன்னும் சிலர் வாசிக்க வேண்டும் என்று கருதினார். 2007இல் தமிழறிஞர்களையும் நண்பர்களையும் கொண்டு Tamil-Shi Jing எனும் கூகிள் மின்னஞ்சல் குழுமம் ஒன்றை உருவாக்கினார். மொழிபெயர்ப்புகளையும் பாடல்களின் பின்னணி விவரங்களையும் கூகிள் ஆவணங்களாகப் பகிர்ந்துகொண்டார். பலரும் கருத்துரைத்தனர். பொருத்தமானவற்றை ஏற்றுக்கொண்டார். கவித்தொகை குறித்த கட்டுரைகளையும் இதேபோல் பகிர்ந்துகொண்டார்.

நானும் சில உரையாடல்களில் பங்குபெற்றேன். காலம் கருதி இரண்டு நிகழ்வுகளை மட்டும் இங்கே சொல்லுகிறேன். குழுமத்தில் பலர் இருந்தனர். யாது காரணம் பற்றியோ பென்னோ லோசா, பவுண்ட் மற்றும் சீனச் சொற்கள் (Fennollosa, Pound and the Chinese Character) எனும் ஆங்கிலக் கட்டுரையை என்னைத் தமிழாக்கும்படி ஸ்ரீதரன் கேட்டுக்கொண்டார். அது சிக்கலான கட்டுரை. எவ்விதம் அயற்பண்புள்ள சில மொழிபெயர்ப்புகள் சீன மூலத்திலிருந்து வெகுவாக விலகிச் சென்று விடுகின்றன என்பதைக் கட்டுரை விளக்குகிறது. இந்தக் கட்டுரையை நூலின் பிற்சேர்க்கையாக இணைக்கலாம் என்றுதான் ஸ்ரீதரன் முதலில் கருதியிருந்தார். பிற்பாடு அவ்வெண்ணத்தை மாற்றிக்கொண்டார். இக்கட்டுரை சீனச் சொற்கள், அவற்றின் அமைப்பு, ஆங்கில இலக்கணம் போன்ற தளங்களில் ஆழமாகப் பயணிப்பதால், நூலின் நோக்கத்தை மீறியது என்பதே காரணம். எனினும் நூலின் பின்னுரையில் சீன மொழிபெயர்ப்பின் சிக்கல்களை விளக்குவதற்குக் கட்டுரையின் சில பகுதிகளைப் பயன்படுத்தியிருக்கிறார். பேராசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி தனது முன்னுரையில் குறிப்பிடுவதுபோல் இந்தப் பின்னுரை மிக முக்கியமானது.

மற்றொரு நிகழ்வு கரடிக் கனவும் பாம்புக் கனவும் என்னும் பாடலை ஸ்ரீதரன் குழுமத்தில் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து நடந்த உரையாடல். இந்தப் பாடல் ஒரு வாழ்த்துடன் தொடங்குகிறது. மூங்கில் வேர்கள் ஒன்றையொன்று பலப்படுத்துவதுபோல ஒரு வீட்டின் சகோதரர்கள் ஒத்து ஒருமித்து வாழ வேண்டும் என்கிறது பாடல். இந்த உவமை என்னை மிகவும் கவர்ந்தது. அப்போது ஒரு பொறியியல் ஏட்டிற்காக மூங்கில் சாரங்களைக் குறித்துக் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன். ஹாங்காங்கின் எல்லாக் கட்டடப் பணித் தலங்களைச் சுற்றிலும் - அவை எத்துணை மாடிக் கட்டடமாக இருந்தாலும் - மூங்கில் சாரங்களைப் பார்க்கலாம். மூங்கிலின் பொறியியல் பண்புகள் எவ்விதம் இந்தப் பாடல் சொல்லவரும் கருத்தோடு இயைந்து வருகிறது என்று ஸ்ரீதரனிடம் தெரிவித்தேன். அவரும் மூங்கிலின் சூழலியல் பண்புகளும் அவ்விதமே ஒத்துப்போகின்றன என்றார். ஆனால் இந்த உரையாடல்களில் வெளியான கருத்துகள் நூலில் இடம் பெறவில்லை. ஒவ்வொரு பாடலைக் குறித்தும் பல்வேறு கருத்துகள் அவரது ஆய்வில் வெளிப்பட்டன. ஆனால் அவற்றின் சாறைத்தான் அவர் இந்த நூலில் தந்திருக்கிறார்.

2008இல் அவர் தனது மொழிபெயர்ப்பைக் கிட்டத்தட்ட முடித்துவிட்டார். ஆனால் அவருக்குத் திருப்தி வரவில்லை. நமது கில்மோர் உத்தேசித்த இலக்கிற்குக் கட்டில் வந்து சேரவில்லை. 2008இல் அவர் பதவி உயர்வு பெற்று பிஜித் தீவுகளின் இந்தியத் தூதரகத்தில் ஆலோசராகப் பணியேற்றபோது கவித்தொகைப் பாடல்களையும் கூடவே எடுத்துச் சென்றார். அவற்றைப் புதுக்கிக்கொண்டே இருந்தார். 2010ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் விடுமுறைக்காகச் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது நான் சென்னையில் பணியாற்றத் தொடங்கியிருந்தேன். நான் பணியாற்றும் ஹாங்காங் நிறுவனம் உள்கட்டமைப்புப் பணியின் ஆலோசகர்களில் ஒருவனாக என்னையும் நியமித்திருந்தது. ஸ்ரீதரன் தனது கவித்தொகை பற்றிய அறிமுகக் கட்டுரைகளை நண்பர்கள் பலருக்கும் அனுப்பியிருந்தார். பலரும் மின்னஞ்சல் வழிக் கருத்துரைத்தனர். அப்படி மின்னஞ்சலில் கருத்துச் சொல்லாதவர்களில் ஒருவர் ஸ்ரீதரனின் நண்பரும் பதிப்பாளருமாகிய க்ரியா ராமகிருஷ்ணன். நேரில் பேசினால்தான் விளக்க முடியும் என்று சொல்லிவிட்டார். ஸ்ரீதரன் சென்னையில் க்ரியா அலுவலகத்தில் அவரைச் சந்தித்தார். நானும் உடன் போயிருந்தேன். க்ரியா ராமகிருஷ்ணன் அந்தக் கட்டுரையை வரிவரியாக விமர்சித்தார். இந்த வரி ஒரு பத்திரிகையாளனின் எழுத்து நடையைப் போல் இருக்கிறது, இந்த வரியில் கவிதை தெரிகிறது, இந்த இடத்தில் ஆய்வாளனின் குரல் கேட்கிறது, இந்த வரியில் வெளிப்படும் நடையில் புனைவின் சாயல் இருக்கிறது என்று அடுக்கிக்கொண்டே வந்தார். ஸ்ரீதரனிடம் பத்திரிகையாளன், கவிஞன், ஆய்வாளன், கதாசிரியன் என்று எல்லா முகங்களும் இருக்கின்றன. அவை கட்டுரையில் வெளிப்பட்டிருக்கின்றன. ஆனால் க்ரியா ராம கிருஷ்ணன் கட்டுரையில் ஒரு குரல்தான் ஒலிக்க வேண்டும் என்றார். ஸ்ரீதரன் விமர்சனங்களைத் திறந்த மனத்தோடு கேட்டுக்கொண்டார். பிஜிக்குப் போய்க் கட்டுரைகளைத் திரும்ப எழுதலானார்.

2011ஆம் ஆண்டு அவர் தில்லிக்கு வந்தார். வட்டாரக் கூட்டுறவிற்கான தெற்காசிய நாடுகளின் குழுமப் பிரிவின் இயக்குநராகப் (Director, South Asian Association of Regional Cooperation- SAARC) பொறுப்பேற்றார். கவித்தொகையும் அவர் கூடவே பிஜியிலிருந்து தில்லிக்கு வந்தது. கில்மோருக்கு இன்னும் திருப்தி வரவில்லை. கட்டில் இலக்கைவிடச் சில அங்குலங்கள் இன்னும் பின்னாலிருப்பதாக அவர் நினைத்தார்.

இந்த உரையை நான் முத்துலிங்கத்திடமிருந்து தொடங்கினேன். முத்துலிங்கத்தைக் கொண்டு முடிப்பது தானே முறை? முத்துலிங்கம் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். 2008ஆம் ஆண்டில் வெளியானது. சுயசரிதைத் தன்மை கொண்டது. இதில் 46 அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் படிக்கலாம். அவை சிறுகதைகளைப் போலிருக்கும். கோவையாகப் படித்தால் நாவலாகும். நூலின் முன்னுரையில் முத்துலிங்கம் இந்த நாவலை இரண்டு வருடங்களாக எழுதிக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார். ‘இது வளர்ந்துகொண்டே வந்தது. சரி, இத்துடன் முடிந்தது என்று முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றால் மேலும் புதிதாக ஏதாவது தோன்றி அதையும் நான் எழுத வேண்டி நேரிடும். நாளுக்கு நாள் இது வளர்ந்தது. “வெந்தால் இறக்கி வை” என்று அம்மா சொல்வாள். அதனால் ஒரு நாள் இறக்கி வைத்துவிட்டேன்.’ சில மாதங்களுக்கு முன்னால் தில்லியில் வசிக்கும் ஸ்ரீதரனோடு சென்னையிருந்து தொலைபேசியில் உரையாடினேன். முத்துலிங்கத்தின் அறிவுரையை அவருக்குச் சொன்னேன். ‘சோறு வெந்துவிட்டது தரன், இறக்கி வைத்துவிடுங்கள்’ என்றேன். பதிலுக்குச் சிரித்தார். அதாவது நான் சொன்னதை அவர் ஏற்கவில்லை என்று பொருள். தொடர்ந்து கவிதைகளையும் கட்டுரைகளையும் அவர் கூராக்கிக்கொண்டிருந்தார்.

கடைசியாகக் கடந்த மாதம் கில்மோர் உத்தேசித்த இலக்கைக் கட்டில் வந்தடைந்திருக்க வேண்டும். நூலின் வரைபடிவத்தை அவர் பதிப்பாளர் ‘காலச்சுவடு’ கண்ணனிடம் கொடுத்தார். அது இப்போது கண்கவர் நூலாகியிருக்கிறது.

இந்த நூலின் உருவாக்கத்தில் என் பங்களிப்பு மிகக் குறைவானதுதான். என்றாலும் அந்த வாய்ப்புக்காக மகிழ்கிறேன். எனது நண்பரின் சிறப்பான இந்த நூலின் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடிந்ததிலும் என் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள முடிந்ததிலும் மேலும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி!

(வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை - கவித்தொகை நூல் வெளியீட்டு விழாவில் பேசியதன் மொழி பெயர்க்கப்பட்ட எழுத்து வடிவம்)
Comments