ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு

மு. இராமனாதன்பேக்கர் தெரு மெட்ரோ ரயில் நிலையம் லண்டன் நகரின் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையத்தில் ஐந்து சுரங்க ரயில் தடங்கள் குறுக்கு மறுக்காக ஓடுகின்றன. ஷெர்லக் ஹோம்ஸின் காலத்தில் இத்தனை தடங்கள் இல்லை. இப்போது ஐந்து தடங்களுக்குமாக 10 நடைமேடைகள்; அதன் வளைந்த சுவர்களில் ஷெர்லக் ஹோம்ஸின் சித்திரங்கள். வட்டத் தொப்பியும் மழை அங்கியும் புகையிலைக் குழாயுமாக உலகப் புகழ்பெற்ற துப்பறிவாளர் நம்மை வரவேற்கிறார்.

நடைமேடையிலிருந்து மேலேறித் தெருவுக்கு வந்ததும், ஷெர்லக் ஹோம்ஸ் `வாழ்ந்த' வீட்டைக் கண்டுபிடிப்பதற்கு நான் யாரிடமும் வழி விசாரிக்கவில்லை. ஸ்மார்ட் ஃபோனின் கூகுள் வரைபடங்களிலும் தேடவில்லை. 221B, பேக்கர் தெரு என்கிற முகவரி ரயில் நிலையத்திலிருந்து நடைதூரம்தான் என்பது எனக்குத் தெரியும். 125 ஆண்டுகளுக்கு முன் வங்கி அலுவலர் ஹோல்டர், ரயில் நிலையத்திலிருந்து நடந்துதானே அந்த வீட்டை அடைந்தார்? ‘Beryl Coroner’ கதையில் அப்படித்தானே வருகிறது? என் நம்பிக்கை பொய்க்கவில்லை.

இத்தனைக்கும் ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் நிகழ்ந்த காலத்தில் (1881- 1904) பேக்கர் தெருவின் கதவு இலக்கங்கள் 100 வரைதான் இருந்தன. கதாசிரியர் ஆர்தர் கானன் டாயில் அவரே சூட்டிக்கொண்ட இலக்கம் தான் 221B. அப்போதைய பேக்கர் தெருவின் வடபுறம் இருந்த ஒரு சிறிய மூன்று மாடிக் கட்டிடத்தை ஆசிரியர் கதைக்களனாக வரித்துக் கொண்டார். 1932-ல் தெருக்கள் சீரமைக்கப்பட்டபோது இந்தக் கட்டிடமும் பேக்கர் தெருவுக்குள் வந்தது.

1990-ல் இலக்கம் 237-க்கும் 241-க்கும் இடையில் இருந்த இந்தக் கட்டிடத்துக்கு 221B என்கிற இலக்கக்தை வழங்கியது லண்டன் மாநகராட்சி. 1815-ல் கட்டப்பட்ட, 1860 முதல் 1934 வரை நகராட்சிக் குறிப்பேடுகளில் லாட்ஜிங் ஹவுஸாக இருந்த இந்தக் கட்டிடம், இப்போது பாரம்பரியச் சிறப்புள்ள கட்டிடமாக அறிவிக்கப்பட்டு, ஷெர்லக் ஹோம்ஸ் அருங்காட்சியமாக விளங்குகிறது.

இந்த வீட்டைக் களனாக வைத்துத்தான் கானன் டாயில், 56 சிறுகதைகள், 4 நெடுங்கதைகள், ஆக 60 கதைகள் எழுதினார். இந்தக் கதைகள் பதிப்புகள் பல கண்டன. வானொலி - மேடை நாடகங்களாயின. பின்னாளில் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களுமாயின. பல மொழிகளில் மொழிபெயர்க் கப்பட்டன.


ஹோம்ஸுடன் தங்கியவர்

221B இலக்கமிட்ட கதவைத் திறந்து உள்ளே நுழைகிறோம். வழவழப்பான கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு 17 படிகளேறி முதல் தளத்துக்குச் செல்ல வேண்டும். நேராக உள்ள கதவைத் திறந்தால் வரவேற்பறை. வலது புறம் பெரிய கணப்பு, மெத்தை வைத்த நாற்காலிகள், டீப்பாய், தொப்பி, புகையிலைக் குழாய், வயலின், சோதனைக் குடுவைகள், புத்தக அலமாரி...

இந்த வீட்டில் ஹோம்ஸுடன் தங்கியிருந்தவர் டாக்டர் ஜான் வாட்சன். ராணுவத்தில் பணியாற்றியவர். ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் தோளில் காயம் பட்டதால், பணி ஓய்வு பெற்று, லண்டனுக்குத் திரும்பியவர். ஹோம்ஸின் சாகசங்கள் அனைத்தும் வாட்ஸனின் கூற்றாகத்தான் சொல்லப்படுகின்றன. ஹோம்ஸும் வாட்ஸனும் சந்திக்கும் முதல் கதை- A Study in Scarlet. இருவரும் வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருப்பார்கள். இந்த வீட்டைப் பார்ப்பார்கள். பிடித்துப்போகும், வாட்ஸன் சொல்லுவார்: “வீட்டில் வசதியான படுக்கையறைகள் இருந்தன. ஒரு விசாலமான காற்றோட்டமான வரவேற்பறை இருந்தது. அதில் இரண்டு அகலமான ஜன்னல்களும் இருந்தன”.

அதில் ஒரு ஜன்னல் வழியாகத் தெருவை எட்டிப் பார்த்தேன். ஹோம்ஸ் இந்த ஜன்னல் வழியாக அடிக்கடி வெளியே பார்ப்பார். ஒருமுறை எதிர்வரிசையில் ஒருவர் கையில் கடிதத்துடன் முகவரியைத் தேடிக்கொண்டிருப்பார். ஹோம்ஸ் அந்த நபர் கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற சார்ஜென்ட் என்பார். எப்படி? அவரது புறங்கையில் நங்கூரம் பச்சை குத்தியிருக்கும். நிமிர்ந்த நடையிலும் கைத்தடியைச் சுழற்றுவதிலும் ராணுவ மிடுக்கு இருக்கும். கிருதா கடற்படைச் சட்டத்துக்குட்பட்ட நீளத்தில் இருக்கும்.

அவருக்கு நடுவயது. அது சார்ஜெண்டுகள் ஓய்வு பெறும் வயது. ஹோம்ஸ் அடுக்கிக்கொண்டே போவார். வாட்ஸனும் வாசகர்களும் வாய் திறந்தபடி கேட்டுக்கொண்டிருப்பார்கள். ஹோம்ஸ் தர்க்க அறிவும் படைப்பாற்றலும் மிக்கவர். அதைப் போலவே தடயவியல் அறிவும் நினைவாற்றலும் நிரம்பப் பெற்றவர். ஒவ்வொரு முறையும் எப்படித் துப்புத் துலக்கினேன் என்று கதையின் முடிவில் வாட்ஸனுக்கு விளக்குவார்.

`அட, இது ஏன் நமக்குத் தோன்றாமல் போயிற்று' என்று நினைப்போம்.

தெருவிலிருந்து பார்வையை அறையை நோக்கித் திருப்பினேன். வாட்ஸன் சொல்வதுபோல் இந்த அறை அப்படியொன்றும் விசாலமானதல்ல. அது எனக்கு முன்பே தெரியும். வீட்டை வாடகைக்கு அமர்த்திக்கொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தில் வாட்ஸன் அப்படிச் சொல்லியிருக்க வேண்டும். ‘His Last Bow’ கதையில் ஹோம்ஸ் சொல்லுவார்: “நாங்கள் வேதியியல் சோதனைகள் நடத்திக்கொண்டிருந்தோம். அதனால் அந்தச் சிறிய அறையில் புதிய விருந்தினருக்குப் சொற்ப இடமே இருந்தது”.

அடுத்து ஹோம்ஸின் படுக்கையறை. வரவேற்பறையிலி ருந்து போகலாம். மாடிப் படிக்கட்டிலிருந்து நேராகவும் போகலாம். கதவையொட்டிய மேசையில் ஹோம்ஸ் ‘பயன்படுத்திய’ பொருட்கள் - பாக்கெட் கடிகாரம், பூதக்கண்ணாடி, அளக்கும் டேப், குறிப்புப் புத்தகம், புகைப்படத்துடன் பர்ஸ், தொட்டெழுதும் பேனா, புகைக் குழாய், தீப்பெட்டி, புகையிலை நிறைக்கும் தாமிரக்குச்சி, பாதி எழுதிய பழுப்பேறிய கடிதம், தராசு, தொலை நோக்கி … சுவரில் படங்களும், மெடல்களும், பல தரத்திலான துப்பாக்கிகளும், குத்துச் சண்டைக் கையுறைகளும்.

கதைகளில் வராத தளம்

இரண்டாம் தளத்தில் வாட்சனின் படுக்கயறை. சீராக அடுக்கி வைக்கப்பட்ட மருத்துவப் புத்தகங்களும் உபகரணங்களும் இருந்தன. சுவரெங்கும் படங்கள். வீட்டின் சொந்தக்காரர் திருமதி ஹட்சனின் அறையும் இதே தளத்தில்தான் இருக்கிறது. வீட்டைப் பராமரிப்பதும் உணவு தயாரிப்பதும் இவர்தான்.

மூன்றாவது தளத்திலும் இரண்டு அறைகள். இந்தத் தளம் கதைகளில் வருவதில்லை. அப்படித்தான் நினைக்கிறேன். கதைகளில் இடம்பெறும் முக்கியமான பாத்திரங்களின் மெழுகு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. The Disappearance of Lady கதையில் ஒரு சவப்பெட்டியிலிருந்து முதிய பெண்மணியை ஹோம்ஸும் வாட்ஸனும் உயிருடன் மீட்பார்கள். இங்கே மூன்று பேரும் ஜீவனோடு மெழுகில் உறைந்திருந்தார்கள். பல கதைகளில் வில்லனாக வரும் பேராசிரியர் மோரியார்டி, கடத்தல்காரன் சார்லஸ் அகஸ்டஸும் அவனைக் கொல்ல கறுப்பு அங்கியில் வரும் சீமாட்டியும், இன்னும் உணர்ச்சியுடன் வடிக்கப்பட்டிருக்கும் பல மெழுகுக் கதாபாத்திரங்களை மூன்றாம் தளத்திலேயே விட்டுவிட்டுப் படிப்படியாக இறங்கி வாசலுக்கு வருகிறோம்.

வாசலில் ஓர் ஐரோப்பியச் சிறுவன். 12 வயதிருக்கும்.ஹோம்ஸின் தொப்பியை அணிந்திருந்தான். அருகில் அவனது தங்கை வாட்ஸனின் தொப்பியுடன். அவளிடம் நாடக பாணியில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். என்னவென்று கேட்டேன். அவன் பேசியது ஸ்பானிய மொழி. நிறுத்தி நிறுத்தி ஆங்கிலத்தில் சொன்னான்: “நீங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்”.

ஹோம்ஸும் வாட்ஸனும் முதன்முதலாகச் சந்தித்து ஹலோ சொல்லிக்கொண்டதும் ஹோம்ஸ் பேசகிற வசனமது. நான் நிறுத்தி நிறுத்திச் சொன்னேன். “ஆகா, அதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?”. அதுதான் வாட்ஸனின் மறுமொழி. பையன் உற்சாகமானான். என்னுடன் படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான். எனக்கும் அவனுக்கும் வயது, மொழி, இனம், தேசம், கலாச்சாரம் என்று நிறைய இடைவெளிகள் இருந்தன. ஆனாலும், இரண்டு பேரும் 221B என்று இலக்கமிட்ட கதவின் முன்பாக நெருங்கி நின்றோம்.

- மு. இராமனாதன், பொறியாளர்,  தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
Comments