ஹாங்காங்கில் நடந்த ஈடிபஸ் நாடகம்

மு இராமனாதன்

Saturday March 29, 2003


கரங்களை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, மாட்சிமை பொருந்திய கிரேக்க மன்னன் ஈடிபஸ் சொல்கிறான்: 'பெருங்குடி மக்களே! உலகம் புகழும் வேந்தனாகிய நானே நேரே வந்திருக்கிறேன் '. நாடகம் துவங்குகிறது.

ஒரு ஆமையைப் போல் உடல் மடங்கி, சுயம் குத்திக் கொண்ட கண்களிலிருந்து குருதி வழிய அவனே சொல்கிறான்: 'குற்றம் இழைத்தவன் நான்தான் என்று தெரிந்த பிறகும், மக்களை ஏறெடுத்துப் பார்ப்பதற்கா கண்கள் வேண்டும் ? '. நாடகம் நிறைவடைகிறது.

ஈடிபஸ் வேந்தனில் நிகழ்கிற இந்த மாற்றத்தை அபூர்வமான நாடக அனுபவமாக்கி வழங்கியது 'ஐக்யா '. கிமு420 இல் கிரேக்க நாடகாசிரியர் சோபாக்ளிஸ் எழுதிய 'ஈடிபஸ் வேந்தன் ' நாடகத்தை அவல நாடகங்களுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்கிறார் அரிஸ்டாடில். பிராய்டின் Oedipus Complex கருத்தாக்கம் இந்நாடகத்தின் கருவிலிருந்து வந்ததுதான். ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் நாடக விழாவில் 22 மார்ச் 2003 அன்று அரங்கேறிய நாடகத்தை இயக்கியவர் எஸ்.வைதேஹி.

மன்னன் லயஸ்-ராணி ஜொகஸ்டா தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அது 'தந்தையைக் கொல்லும் ' என்று நிமித்திகர்கள் சொன்னதால், லயஸ் குழந்தையைக் கொல்லுமாறு பணிக்கிறான். ஆனால் குழந்தை கைமாறி அண்டை நாட்டு அரசனிடம் வருகிறது.பிறப்பின் ரகசியம் தெரியாமல்,அங்கு இளவரசனாய் வளர்கிறான் ஈடிபஸ். ஒரு நிமித்திகன் 'தந்தையைக் கொல்வாய்; தாயை மணப்பாய் ' என்று சொன்ன வாக்கைக் கேட்டு மனம் உலைந்து நாட்டை விட்டுப் போகிறான். வழியில் தகராறு ஒன்றில் லயஸை, மன்னர் என்றோ தந்தை என்றோ அறியாமல் கொன்று விடுகிறான்.பிறகு பிரபலமாகி, மன்னனாகி, ராணி ஜொகஸ்டாவையே மறுமணம் செய்து கொள்கிறான்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியக் கடவுளிடமிருந்து லயஸைக் கொன்றவனை நாடு கடத்த வேண்டும் என்ற செய்தி வருகிறது. உண்மையை நோக்கி ஈடிபஸின் தேடலும் துவங்குகிறது. நிமித்திகர் டைரேக்ஷியஸ் வருகிறாள்;ஈடிபஸ்தான் லயஸைக் கொன்றவன் என்கிறாள். ஈடிபஸ் சினக்கிறான்;டைரேக்ஷியஸை பழிக்கிறான்;மைத்துனன் கிறயனையும் இகழ்கிறான். ஆனல் உண்மை மெல்லக் கட்டவிழ்கிறது. தான் கொன்றது தந்தையை, மணந்தது தாயை என்று உணர்கிற ஈடிபஸ் நொறுங்கிப் போகிறான். ராணி ஜொகஸ்டாவின் தற்கொலை அவனது அவலத்தை உச்சத்திற்கு இட்டுச் செல்கிறது. கண்களைக் குருடாக்கிக் கொள்கிறான்.

உண்மையைத் தேடிய வேட்டையின் முடிவில் தானே வேட்டையாடப் பட்டதை உணர்கிறான் ஈடிபஸ்.

சிக்கலும் அவலமும் நிறைந்த நாடகம்.

கலை, பொழுதுபோக்கத்தான் என்கிற வெகுஜன சித்தாந்தம் மேலோங்கியிருக்கிற சூழலில் இப்படி ஒரு காத்திரமான நாடகம் எங்ஙனம் சாத்தியமாயிற்று ? ஒரு வருஷம் முன்பு வரை ஹாங்காங்கில் எல்லாம் சாதரணமாய்த்தான் இருந்தது. நாடக ஆர்வலர்கள் இருந்தனர்; நாடகங்களும் நடந்தன. ஆயின் ஹாங்காங்கில் நவீன நாடகங்களுக்கான துவக்கம் குறித்தது மார்ச் 2002-இல் மேடையேறிய சுந்தர ராமசாமியின் 'யந்திர துடைப்பான் '. ஐக்யாவின் அந்த நாடகம் ஒரு சாமியாரின் உள்ளுக்குள் இருக்கும் மனிதனை வெளிக்கொணர்ந்தது. அடுத்து, ஜெர்மானிய நாடகாசிரியர் ஸீக்ப்ரெட் லென்ஸின் 'நிரபராதிகளின் காலம் ' ஸ்ரீதரனின் இயக்கத்தில் ஜுன் 2002-இல் அரங்கேறியது (http://www.thinnai.com/pl1007023.html). மனித மனங்களில் அமிழ்ந்து கிடக்கும் குற்ற உணர்வை நாடகம் கலாபூர்வமாய்ச் சொல்லியது. தொடர்ந்து பாரதியின் பாஞ்சாலி சபதம் 'விதியோ கணவரே ' எனும் தலைப்பில் டிசம்பர் 2002இல் நிகழ்த்தப்பட்டது. (http://www.thinnai.com/ar0104033.html). மனைவியைச் சூதாடிய கணவர்களின் முன்மயிரைப் பற்றி கோபத்தின் உச்சத்தில் 'விதியோ கணவரே ' என்று கேட்கிறாள் பாஞ்சாலி. இப்போது 'ஈடிபஸ் '.

நாயகனில் நேர்கிற வீழ்ச்சியை, மாற்றத்தை, நாடகம் மையப்படுத்தியிருந்தது. கிரேக்க வரலாற்றை நினைவூட்டுகிற உடைகள், நேர்த்தியான நடிப்பு, நல்ல மொழி உச்சரிப்பு, எளிய மேடைக் களம், கதையோட்டதில் மெல்ல மங்குகிற ஒளி-என்று

எல்லாக்கூறுகளும் மாற்றம் என்கிற மையக் கருத்தை நோக்கியே பின்னப் பட்டிருந்தது.

மூல நாடகத்தை 'எல்லாம் விதியின் செயல் ' எனும் கருத்தை வலியுறுத்துகிறது என்பவருண்டு. ஈடிபஸின் மதியீனம்தான் அவனது இழிகதிக்கு காரணம் என்பவருமுண்டு. ஆயின், இந்த நாடகம் ஈடிபஸின் கர்வம் அழிந்து படுகிற மாற்றத்தை முன்னிருத்தியிருந்தது.

வரும் பொருள் அறிந்த நிமித்திகர் டைரேக்ஷியஸிற்கும், கதைசொல்லும் சூத்ரதாரிக்கும் முகச்சாயம் இருந்தது.

மூல நாடகத்தில் ஆணாக இருந்த டைரேக்ஷியஸின் பாத்திரம் இங்கு பெண்ணாகி இருந்தது. 'கண்கள் உண்டு உனக்கு; ஆனால் உன்னை எதிர் நோக்கும் பேரழிவைக் காண உன் கண்களுக்கு ஆற்றல் இல்லை ' என்று டைரேக்ஷியஸ் ஈடிபஸை நோக்கி சொல்கிற தொனி ஒப்பரியை ஒத்திருந்தது. மொழி பெயர்ப்பு நாடகங்களில், நடிக்கப்படுகிற மொழியின் பண்பாட்டுக் கூறுகள் கவனமாக உட் செலுத்தப் படுகிறபோது, நாடகத்தின் பரிமாணம் விரிவடைகிறது.

மூல நாடகத்தில் 'கோரஸ் ' வருகிறது. கதையை நகர்த்திச் செல்லவது, கதா பாத்திரங்களோடு உரையாடுவது, செய்தி சொல்வது -எல்லாம் கோரஸின் பணிகள். இங்கே அது சூத்ரதாரியாய் மாறியிருந்தது. கூடவே ஈடிபஸின் உள் மன அதிர்வுகளை பின்னணியில் இருந்தபடி பிரதிபலிக்கிற பாத்திரமாகவும் சூத்ரதாரி படைக்கப் பட்டிருந்தது. சூத்ரதாரிக்கு முகத்தை மறைக்கும் முகக்கூடு ஒன்றும் இருந்தது. ஈடிபஸ் உண்மை உணர்கிறபோது முகக்கூடு மைய மேடையை நோக்கி வீசப்படுகிறது. சூத்ரதாரியின் முகமும் தெரிகிறது. அது மரபு, மாட்சி எல்லாம் மாயை என்று சொல்வது போலிருந்தது.

ஹாங்காங்கில் இன்னும் நல்ல நாடகங்களுக்கான களம் இருக்கிறது என்பதுதான் ஈடிபஸின் செய்தி.

குழு:

ஈடிபஸ்- கார்த்திக்

சூத்ரதாரி- அனுராதா

கிறயன்- வைத்தியநாதன்

டைரேக்ஷியஸ்- ராஜி MRS

ஜொகஸ்டா- ராஜி KGS

தூதுவன்- முகுந்தன்

ஆயன்- M R ஸ்ரீனிவாசன்

பணியாள்- K G ஸ்ரீனிவாசன்

ஒளி- ஸ்ரீதரன்

உடை, ஒப்பனை & இயக்கம்- எஸ் வைதேஹி

நன்றி: திண்ணை மார்ச் 29, 2003

Comments