சீனா-ஜப்பான் : வரலாற்றுப் பாடம்

மு. இராமனாதன்

Thursday May 19 2005 00:00 IST

இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் ஈட்டிய வெற்றியின் 60 ஆண்டு நிறைவைக் கொண்டாட சுமார் 50 நாடுகளின் தலைவர்கள் மே 9 அன்று மாஸ்கோவில் கூடினர். இந்த விழாவில் போரில் தோல்வியடைந்த ஜப்பானும் பங்கு பெற்றது. "எல்லோரும் இப்போது நண்பர்கள்' என்பது ஜப்பான் உலகுக்குச் சொல்ல விழையும் செய்தி. ஆனால் ஒரு மாதம் முன்பு - ஏப்ரல் 9ஆம் தேதி - ஜப்பானை இப்போதும் பகைவனாய்க் கருதும் 20,000க்கும் மேற்பட்டோர் பெய்ஜிங் நகர வீதிகளில் கோஷமிட்டனர்.

போராட்டத்திற்குக் காரணம் ஜப்பானின் கல்வி அமைச்சகம் ஏப்ரல் தொடக்கத்தில் அங்கீகரித்த நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான ஒரு வரலாற்றுப் பாட நூல். அதில் ஜப்பானிய ஏகாதிபத்தியம் சீனாவை ஆக்கிரமித்திருந்த காலங்களில் நிகழ்த்திய வன்கொடுமைகள் பூசி மெழுகப்பட்டு இருந்ததாகச் சீனா குற்றஞ்சாட்டியது. ஜப்பானுக்கு எதிராக பெய்ஜிங்கில் தொடங்கிய போராட்டம், அடுத்த இரண்டு வாரங்களில் சீனாவின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்தது. சீன - ஜப்பானிய உறவு கடந்த 30 ஆண்டுகளின் மோசமான நிலைக்குத் தாழ்ந்தது. ஏப்ரல் 22 அன்று இரு தேசத் தலைவர்களும் சந்தித்தனர். சீன அரசு போராட்டத்தைக் கைவிடுமாறு மக்களிடம் கோரியது. இப்போதும் அவநம்பிக்கை மேகம் கலையவில்லை. எனினும் அமைதி தென்படுகிறது.

2004 செப்டம்பரில் பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இந்தியா, ஐ.நாவின் பாதுகாப்புக் குழுவில் நிரந்தர இடம் வேண்டிக் கூட்டாக விண்ணப்பித்தன. ஜப்பானின் கோரிக்கையைச் சீனா எதிர்த்தது. அமெரிக்காவும் ஜப்பானும் தங்களுக்குத் தைவானின் பாதுகாப்பில் அக்கறை உள்ளதாகச் சொல்லி பிப்ரவரியில் வெளியிட்ட கூட்டறிக்கை சீனாவை மேலும் எரிச்சலூட்டியது. தைவான், சீன மண்ணின் பிரிக்க இயலாத பகுதியென்பது சீனாவின் நிலைப்பாடு. கனன்று கொண்டிருந்த ஜப்பானிய எதிர்ப்பு பற்றிப் பரவ வரலாற்று நூல் சர்ச்சை காரணமானது. "சீனர்களின் ஆறாத வரலாற்றுக் காயங்கள் மீண்டும் ஒரு முறை கிளறி விடப்பட்டது'', என்கிறார் ஹாங்காங் நகர்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் அந்தோணி செங்.

இவர் சொல்கிற வரலாறு 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்குகிறது எனலாம். அப்போதுதான் வல்லரசுகள் பல, ஏற்றத் தாழ்வான ஒப்பந்தங்கள் மூலம் சீனாவைத் தங்களுக்குள், ""சிறப்பு உரிமைப் பகுதி''களாகப் பிரித்துக் கொண்டு, தத்தமது வர்த்தகக் களன்களாக்கின. இந்த வல்லரசுகளுக்குள் இருந்த ஒரே ஆசிய நாடான ஜப்பான், 1895-ல் கொரியாவிலும், தாய்வானிலும் கால் பரப்பியது; 1905-ல் சீனாவின் கிழக்குப் பகுதியான மஞ்சூரியாவில் அப்போது செல்வாக்குச் செலுத்திய ரஷியாவைத் தோற்கடித்து பெரும் சக்தியாக வளர்ந்தது.

1931-ல் சீனாவின் தேசிய அரசுக்கெதிராக ஜப்பான் நேரடிப் போரில் இறங்கியது. 1937-ல் போர் தீவிரமடைந்தது. பெய்ஜிங், ஷாங்காய் நகரங்கள் வீழ்ந்தன. அதே ஆண்டின் இறுதியில் அப்போதைய சீனத் தலைநகரான நான்ஜிங்கைக் கைப்பற்றியது. அடுத்த ஆறு வாரங்களில் நிகழ்ந்தவை, வரலாற்றில் ""நான்ஜிங் படுகொலை'' என்று குறிக்கப்படுகிறது. ஆண்களும், பெண்களும் குழந்தைகளுமாகக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சம் வரை இருக்குமென்கின்றனர் வரலாற்றாளர்கள்.

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாயினர். அப்போது நான்ஜிங்கில் இருந்த நியுயார்க் டைம்ஸின் நிருபர் டில்மான் டர்டின் எழுதினார்: "எனது கார் சவங்களுக்கு இடையேதான் ஊர்ந்து செல்ல வேண்டியிருந்தது. நான் பார்த்துக் கொண்டிருந்த போதே பத்து நிமிடங்களுக்குள் 200 பேர் கொல்லப்பட்டனர்.'' வெ. சாமிநாத சர்மா தனது "சீனாவின் வரலாறு'' எனும் நூலில் எழுதுகிறார்: "இருவர் இருவராக மணிக்கட்டுகளை இரும்புக் கம்பிகளினால் இறுக்கிக் கட்டிச் சுட்டுக் கொன்றார்கள்; துப்பாக்கி முனையினால் குறிபார்த்துக் குத்தும் பயிற்சி பெறுவதற்காக, சிறைப்பட்ட சீனப் போர் வீரர்களின் கண்களைக் கட்டிவிட்டு அவர்களை உபயோகப் படுத்தினார்கள்; பச்சைக் குழந்தைகளை ஆகாயத்திலே தூக்கிப்போட்டுக் கீழே துப்பாக்கிக் கத்தியை நீட்டினார்கள்''. சீனாவின் நகரங்களையும் துறைமுகங்களையும் கைப்பற்றிய ஜப்பானால் கிராமப்புறங்களில் காலூன்ற முடியவில்லை.

1941 டிசம்பர் மாதம் ஓர் அதிகாலையில் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் இருந்த முத்துத் துறைமுகத்தையே (டங்ஹழ்ப் ஏஹழ்க்ஷர்ன்ழ்) யாரும் எதிர்பாரா வண்ணம் தாக்கியது ஜப்பான். 1945-ல் ஜப்பானின் ஹிரோஷிமா - நாகசாகி நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியது. தொடர்ந்து ஜப்பானின் ஆக்கிரமிப்பிலிருந்த மலேசியா, பர்மா, பிலிப்பின்ஸ் முதலான நாடுகள் ஒவ்வொன்றாய்க் கைநழுவிப் போயின; மஞ்சூரியாவை ஜப்பானிடமிருந்து ரஷியா கைப்பற்றியது. அதே ஆண்டு ஜப்பான் சரணடைய வேண்டி வந்தது. சீனாவில் 1949-ல் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்திற்கு வந்தது.

ஆட்சி மாறிய போதும் சீனா - ஜப்பான் இடையிலான பகை நீடித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பாடு, ஜெர்மனி தனது நாஜித் துருப்புகளின் சகல அராஜகங்களுக்கும், பாதிக்கப்பட்ட நாடுகளிடம் மன்னிப்புக் கோரியது; நஷ்ட ஈடுகள் வழங்கியது. மாறாக ஆசியாவில், ஜப்பானுக்கும் அதனால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும், குறிப்பாகச் சீனாவுக்குமிடையே ஒரு முழுமையான சமரசம் ஏற்படவில்லை. ஆயினும் யுத்தங்களின் மூலம் சீனாவிற்கு ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு ஜப்பான் 1972-ல் வருத்தம் தெரிவித்தது. தொடர்ந்து அண்டை நாடுகளுக்கிடையே ராஜீய உறவுகள் நிறுவப்பட்டு, வர்த்தக உறவுகள் மேம்பட்டன. சீனாவில் உள்ள ஜப்பானிய நிறுவனங்கள் 92 லட்சம் சீனர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கிறது. சுமார் 80 ஆயிரம் ஜப்பானியர்கள் சீனாவில் வசிக்கின்றனர்.

வர்த்தக உறவுகள் வளர்ந்த போதும் அரசியல் உறவுகளில் இடைவெளி முழுவதுமாக நிரப்பப்படவில்லை. அண்மையப் போராட்டங்களுக்குக் காரணமான பாட நூலில், நான்ஜிங் படுகொலையை ஒரு ""சம்பவம்'' என்றும் அதில் ""பல'' சீனர்கள் கொல்லப்பட்டனர் என்றும் கண்டிருந்தது. இது சீனர்களின் குமுறலுக்குக் காரணமாய் அமைந்தது. சீனர்களின் உணர்வுகளைப் பதிவு செய்த அரசியல் நோக்கர்கள், அரசின் நோக்கங்களைக் குறித்தும் ஆராயத் தவறவில்லை. ""சீனாவைப் போல ஒரு கட்டுப்பாடான தேசத்தின் அரசின் சம்மதமின்றி இப்படிப்பட்ட போராட்டங்கள் சாத்தியமில்லை'' என்கிறார் பத்திரிகையாளர் மார்க் ஓ நெயில். ""மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் எதற்கும் சீனாவில் ஊர்வலங்கள் அனுமதிக்கப்படுவதில்லை; ஆனால் ஜப்பானுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை வெளிக்காட்ட அனுமதிப்பதன் மூலம், சீனா உலக அரங்கில் ஜப்பானிய எதிர்ப்பு அரசியல் நடத்த முனைகிறது'' என்கிறார் அரசியல் விமர்சகர் ஃபிராங் சிங்.

ஜப்பானைக் குற்றம் சாட்டும் சீனா, தனது பாட நூல்களில் பல வரலாற்றுப் பதிவுகளைத் தவிர்த்திருக்கிறது என்கிறார் பத்திரிகையாளர் பெஞ்சமின் மோர்கான். 1951 திபெத்திய ஆக்கிரமிப்பு, 1979 வியட்நாமியப் படையெடுப்பு, 1989 தினெமென் சதுக்க அடக்குமுறை போன்ற எதுவும் சீனப் பள்ளிகளின் வரலாற்று வகுப்புகளில் சொல்லித் தரப்படுவதில்லை என்கிறார் அவர்.

சீனாவின் போராட்டத்தை இப்போதைக்கு முடிவுக்குக் கொண்டு வந்ததில் ஜப்பானியப் பிரதமர் ஜூனிசிரோ கொய்சுமிக்குப் பங்கிருக்கிறது. ஏப்ரல் 21 அன்று ஆசிய - ஆப்பிரிக்க மாநாட்டில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட தலைவர்களின் முன்னிலையில், தமது தேசத்தின் கடந்த கால அத்து மீறல்களுக்கு, பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளிடம் மன்னிப்புக் கோரினார் கொய்சுமி. இதைத் தொடர்ந்து, சீன அரசு ஜப்பானிய எதிர்ப்புப் பேரணிகளைத் தடை செய்தது; எதிர்ப்பாளர்களைச் சிறைப்படுத்தியது. "ஆனால் அதற்கு முன்பாக நாடெங்கும் நடந்த போராட்டங்களைத் தமது ஜப்பானிய எதிர்ப்பு அரசியலுக்குச் சீனத் தலைவர்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டனர்'' என்பது பி.பி.சியின் பெய்ஜிங் செய்தியாளர் லூயிசா லிம்மின் கருத்து.

"வரலாற்றைத் திரிக்கவோ பயன்படுத்தவோ கூடாது; அதிலிருந்து பாடம் கற்க வேண்டும்'', என்கிறார் ஹாங்காங் பேராசிரியர் டீ க்ளேயர்.

(கட்டுரையாளர், ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்)

-தினமணி மே19, 2005  
Comments