சீனா-வாடிகன் உறவு

மு. இராமனாதன்

 Wednesday April 20 2005 00:00 IST

ஏப்ரல் 8 அன்று வாடிகன் நகர வீதிகள் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்களால் தளும்பியது. அன்றுதான் புனித பீட்டர் சதுக்கத்தில் போப் 2-வது ஜான் பாலின் ஈமச் சடங்குகள் நடந்தன. 100-க்கும் மேற்பட்ட தேசங்களின் அரசர்கள், ராணிகள், தலைவர்கள் பிரார்த்தனையில் பங்கேற்றனர். அந்த வரிசையில் மக்கள் சீனக் குடியரசின் பிரதிநிதி யாருமில்லை. சீனாவுக்கும் வாடிகனுக்கும் அரை நூற்றாண்டு காலமாக ராஜீய உறவுகள் இல்லை. ஆயினும் போப்பின் மறைவிற்குச் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்தது. போப்பின் மரணத்தின் மூலம், 110 கோடி கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களின் திருச்சபைக்கும், 130 கோடி மக்கள்தொகையுள்ள சீனாவிற்கும் இடையிலான பிளவு மீண்டும் ஒரு முறை உலக நாடுகளின் பார்வைக்கு வந்தது.

போப்பின் இறுதிச் சடங்குகள் சீனத் தொலைக்காட்சி எதிலும் ஒளிபரப்பப்படவில்லை. ஆனால் ஷாங்காய் நகரின் புனித இக்னேஷியஸ் தேவாலாயத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட போப்பின் உருவப் படத்திற்கு முன்னால் சீனக் கத்தோலிக்கர்களின் கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. பெய்ஜிங்கின் தெற்குத் தேவாலயத்திலும் டியான்ஜின் நகரிலும் வழிபாடுகள் நடந்தன. சீனாவின் கத்தோலிக்கத் ""தேசாபிமான''க் கழகம், சீனாவின் 50 லட்சம் கத்தோலிக்கர்கள் துயரத்தில் பங்கு கொள்வதாக வாடிகனுக்குத் தெரிவித்தது. சீன அரசின் அங்கீகாரத்துடன் இயங்கும் இந்தக் கழகம், வாடிகனின் கட்டுப்பாட்டில் வருவதில்லை. கத்தோலிக்கத்தைப் பின்பற்றும் அனைத்து நாடுகளிலும் ஆயர்களும் (க்ஷண்ள்ட்ர்ல்) கார்டினல்களும் போப்பால் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் சீனா இதை ஒப்பவில்லை. இதைத் தமது தேசத்தின் உளவிவகாரங்களில் தலையிடுவதாகக் கருதுகிறது சீனா. 2001-இல் ஹாங்காக் பல்கலைக்கழகமொன்றில் உரையாற்றிய சீன அமைச்சர் மீ சியாவோவன் சொன்னார்: ""உலகின் நான்கு மிகப் பழமையான நாகரிகங்களில் (எகிப்து, பாபிலோன், இந்தியா மற்றும் சீனா) சீன நாகரிகம் மட்டுந்தான் அன்னியக் கலாசாரங்களால் அதிகம் பாதிக்கப்படாதது. அதனாலேயே சீனாவின் மதங்கள் தேசாபிமானமிக்கவை. இதில் சீனர்களுக்குப் பெருமையே.''

சீன-வாடிகன் உறவில் மற்றொரு தடையாகச் சீனா கருதுவது, தைவானோடு ராஜீய உறவை வாடிகன் பேணுவதாகும். இதிலும் சீனாவிற்கு உடன்பாடில்லை. சீன மண்ணின் பிரிக்க இயலாத பகுதி தைவான் என்பது சீனாவின் நிலைப்பாடு.

சீனாவின் அரசியலமைப்பு, மத நம்பிக்கைச் சுதந்திரத்தை வழங்குகிறது. சீனாவில் ஐந்து மதங்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன - தாவோயிசம், பௌத்தம், இஸ்லாம், கத்தோலிக்க மற்றும் சீர்திருத்த (புரோட்டஸ்டன்ட்) கிறிஸ்துவம். சுமார் 20 கோடி மக்கள் (15 சதவீதம்) இந்த மதங்களைப் பின்பற்றுவதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. அரசின் அனுமதியுடன் இயங்கும் உள்நாட்டு அமைப்புகளின் கீழ் இவை செயல்படுகின்றன. அரசாங்கத்திற்கு வெளியே மதங்களின் பெயரால் அதிகார மையங்கள் உருவாவதைச் சீனா விரும்பாததுதான் இதற்குக் காரணம் என்று தனது அறிக்கையொன்றில் குறிப்பிடுகிறது அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை.

தாவோயிசம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஒரு மார்க்கமாக வளர்ந்து சீனக் கலாசாரப் பின்னணியில் சமூக ஒற்றுமையை முன்னிறுத்தியது. சுமார் 1500 தாவோயிசக் கோயில்கள் சீனாவில் உள்ளன. கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வந்த பௌத்த மதம், சீனக் கலாசாரத்திற்கு இசைவாக இருந்தது. அரசின் புள்ளி விவரங்களின்படி பௌத்த மதத்தை சுமார் 10 கோடிச் சீனர்களும், மத்திய கிழக்கிலிருந்து ஏழாம் நூற்றாண்டில் வந்த இஸ்லாமிய மதத்தை 2 கோடிச் சீனர்களும் பின்பற்றுகின்றனர். கத்தோலிக்கக் கிறித்துவத்தின் வழி நடப்போர் 50 லட்சம் பேர்; இவர்கள் கத்தோலிக்க தேசாபிமானக் கழகத்தின் உறுப்பினர்கள். இவர்களைத் தவிர, வாடிகனுக்கு விசுவாசமான ""தலைமறைவு''க் கத்தோலிக்கர்கள் சீனாவில் 1 கோடி வரை இருக்கக் கூடுமென்கின்றன சில வெளிநாட்டுப் பத்திரிகைகள். இதைப் போலவே சீர்திருத்த (புரோட்டஸ்டன்ட்) கிறிஸ்துவர்கள் அதிகாரப்பூர்வமாக 1.5 கோடிப் பேரும், சுயேச்சையாக 3 கோடிப் பேரும் இருப்பதாகவும் அவை சொல்கின்றன. இந்த மதங்களன்னியில் பல்வேறு பூர்வகுடி மதங்கள் - கன்ஃபியூஷனிசம், தாவோயிசம், பௌத்தம் முதலான கோட்பாடுகளின் தொய்வான இணைப்பில் செயல்படுகின்றன.

1840-இன் "ஓபியம்' யுத்தத்திற்குப் பின் ஏகாதிபத்தியம் சீனாவிற்குள் நுழைந்தது. தொடர்ந்து வந்த சமயப் பிராசாரகர்கள் (missonaries) மூலம் கிறிஸ்துவம் சீனாவிற்குள் பரவியது. ஆனால் இந்தப் பிரசாரகர்களில் பலர், பல்வேறு அத்துமீறல்களை நிகழ்த்தியதாகக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டி வந்திருக்கிறது. 1949-இல் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்திற்கு வந்தது. 1950-இல் வூ யாஜாங் என்பவரால் முன்மொழியப்பட்ட சுய-நிர்வாகம், சுயசார்பு, சுயபிரசாரம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்த ""மூன்று சுய-பிரகடனம்'' எனும் அறிக்கை கிறிஸ்துவத் "தேசாபிமானிக''ளிடம் வரவேற்பைப் பெற்றது என்கிறது 1997-இல் சீன அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை. 1957-இல் அரசு நியமித்த ஆயர்களை வாடிகன் ஏற்க மறுத்தபோது, வாடிகனுடனான ராஜீய உறவை பெய்ஜிங் துண்டித்தது.

சீனாவுடன் உறவைப் புதுப்பிப்பதில் மறைந்த போப் ஜான் பால் ஆர்வம் காட்டி வந்திருக்கிறார். ஆனால் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விழைந்த அவரது எண்ணம் ஈடேறவில்லை. 2001-இல் போப், காலனியக் காலத்தில் கத்தோலிக்கப் பிரசாரகர்கள் சீனாவிற்கு இழைத்த ""தவறு''களுக்குச் சீன மக்களிடம் திருச்சபையின் மன்னிப்பைக் கோரினார். முன்னுதாரணமில்லாத இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சீன-வாடிகன் உறவுகள் மேம்படும் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்டது. போப்பின் மறைவிற்குப் பிறகு அந்த நம்பிக்கை மீண்டும் துளிர்த்திருக்கிறது.

போப்பின் இறுதிச் சடங்கில் தைவான் அதிபர் சென் ஷீய் பியான் பங்கேற்றார். அவருக்கு அனுமதி வழங்கிய வாடிகனையும் இத்தாலியையும் பெய்ஜிங் விமர்சித்தது. ஆயினும், சீனாவுடனான உறவைச் சீர்படுத்த, தைவானுடனான ராஜீய உறவுகளைத் துறப்பதற்கு வாடிகன் எப்போதுமே தயாராக இருக்கிறது என்று ஹாங்காக் கத்தோலிக்கக் குரு ஜோசப் ஜென் இந்தத் தருணத்தில் சொன்னது, மேற்கு ஊடகங்களில் முக்கியச் செய்தியாக வெளியானது. இதை முன் நிபந்தனையாக வைக்காமல் பெய்ஜிங் பேச்சு வார்த்தைகளைத் தொடங்க வேண்டுமென்று ஜென் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

ஆயர்களைத் தாமே நியமிக்க வேண்டுமென்று சீனா சொல்வது அப்படியொன்றும் புதியதல்ல என்கிறார் பத்திரிகையாளர் கெவின் ராஃபர்டி. 1905-க்கு முன்னர், பிரான்ஸ், ஆஸ்திரியா உள்படப் பல ஐரோப்பிய நாடுகள் ஆயர்களைத் தாமே நியமித்திருக்கின்றன. ஸ்பெயினின் சர்வாதிகாரி ஜெனரல் பிரான்ஸிஸ்கோ பிராங்கோவின் (1936 - 75) ஆட்சிக் காலத்தில், ஆயர் பதவிக்குப் போப் மூன்று பெயர்களை முன்மொழிவார் என்றும், அவர்களுள் ஒருவரை பிராங்கோ தெரிவு செய்வார் என்றும் எழுதுகிறார் ராஃபர்டி. கியூபாவின் ஆயர்களை, ஃபிடல் காஸ்ட்ரோவுடன் ஆலோசித்த பிற்பாடே வாடிகன் நியமிக்கிறது என்றும், இது போன்ற ஒரு முறையை வாடிகன் சீனாவிற்கும் நீட்டிக்கலாம் என்றும் கூறுகிறார் பெய்ஜிங் பத்திரிகையாளர் நெய்லீன் சௌ வெய்ஸ்ட்.

உறவுகள் மேம்பட்டு வருவதன் மற்றோர் அடையாளந்தான், மார்ச் இறுதியில் பெல்ஜியத்தின் கார்டினல் காட்ஃபிரைட் டேனீலஸ், சீனாவிற்கு மேற்கொண்ட பயணம். டேனீலசைத் துணைப் பிரதமர் ஹூய் லியாங்யூ வரவேற்றார். சீனாவின் மத நிர்வாக இயக்குநர் யீ ஸியாவென், டேனீலசைச் சந்தித்தார். திருச்சபையின் மிதவாதிகளுள் ஒருவர் என்று அறியப்படுகிற டேனீலசின் சீன விஜயம் குறிப்பிடத்தக்கது என்கின்றனர் வாடிகன் நோக்கர்கள்.

புதிய போப்பைத் தேர்வு செய்த பின்னர், புதிய தலைமையில், உறவுகள் புதிய வெளிச்சத்தில் பரிசீலிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். "திருச்சபை தன்னை ஓர் உலகளாவிய அமைப்பு என்று நம்புகிறது. உலகின் 20 சதவீத மக்களின் தேசத்தை உட்படுத்தாமல் எப்படி உலகளாவிய அமைப்பாக முடியும்?'', என்று கேட்கிறார் அரசியல் விமர்சகர் ஃபிராங் சிங். தனது கதவுகளைப் புற உலகிற்குத் திறந்து கொண்டிருக்கும் சீனா. வாடிகனுடனான உறவு மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

(கட்டுரையாளர், ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்.)

 -தினமணி 20 ஏப்ரல் 2005
Comments